171 தோட்டப் பகுதிகளுக்குப் பதிவு தொடக்கம்

2 mins read
அக்டோபர் 8 முதல் பதிந்து கொள்ளலாம்: தேசியப் பூங்காக் கழகம்
6d47b186-0abe-4572-a299-b4463e148c21
தோட்ட நிலப்பகுதி ஒதுக்கீட்டுத் திட்டம் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு இடங்களில் தோட்டத்துக்கான 171 நிலப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆர்வமுள்ள குடியிருப்பாளர்கள் அவற்றுக்கு அக்டோபர் 8ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 21ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இணையம் வழியாக இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என தேசியப் பூங்காக் கழகம் அக்டோபர் 8ஆம் தேதி தெரிவித்தது.

ஏற்கெனவே தோட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 13 வட்டாரங்களில் இந்த நிலப்பகுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் 59 ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் ஏ,பி,டி ஆகிய பகுதிகளில் உள்ளன.

மேலும் 55 புக்கிட் கோம்பாக் பூங்காவிலும் ஒன்-நார்த்தில் 18 இடங்களும், தியோங் பாரு பூங்காவில் 16 இடங்களும் காலாங் ரிவர்சைட் பூங்காவில் 11 இடங்களும் அமைந்துள்ளன.

எஞ்சிய 12 நிலப்பகுதிகள் அல்ஜுனிட் பூங்கா, பிடோக் ரெசர்வார் பூங்கா, சுவா சூ காங் பூங்கா, பாசிர் ரிஸ் பூங்கா, செங்காங் ரிவர்சைட் பூங்கா, சன் பிளாசா பூங்கா, ஈசூன் பூங்கா ஆகியவற்றில் அமைந்துள்ளன.

இவை அனைத்திலும் செடிகளை வளர்ப்பதற்காக 2.5 மீட்டருக்கு 1 மீட்டர் எனும் அளவில் உயர்த்திக் கட்டப்பட்ட மேடை, மணல், தோட்டக்கலைக் கருவிகளை வைப்பதற்கான இடம் ஆகியவை இருக்கின்றன. ஆண்டுக்கு 57 வெள்ளி என்ற கட்டணத்தில் மூன்று ஆண்டுகள் வரை இந்த நிலப்பகுதிகளைக் குத்தகைக்கு எடுக்கலாம்.

எந்தவோர் இடத்திலும் ஒரு குடும்பத்தினர், ஒரு நேரத்தில் ஒரு நிலப்பகுதிக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

காய்கறிகள் உட்பட உண்பதற்குரியவற்றை வளர்ப்பதற்கு இந்த நிலப்பகுதிகள் வழங்கப்படுகின்றன.

2016ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் நடப்பில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்