வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார (WSH) வழிமுறைகளைப் பின்பற்றுமாறு சிறிய, நடுத்தர வர்த்தகங்களை ஊக்குவிக்க 18 தனியார் நிறுவனங்கள் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தூதர்களாக (WSH Advocates) பணியமர்த்தப்பட்டுள்ளன.
‘மைக்ரான் சிங்கப்பூர்’, ‘எஸ்எம்ஆர்டி’, ‘ரோல்ஸ் ராய்ஸ்’, ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் அடங்கும்.
செப்டம்பர் 11ஆம் தேதி, 1,600 பேருடன் சேண்ட்ஸ் மாநாடு, கண்காட்சி மையத்தில் நடந்த எட்டாவது சிங்கப்பூர் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மாநாட்டில் மனிதவள அமைச்சரும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டான் சீ லெங் இதைக் காணொளி இணைப்புவழி அறிவித்தார்.
“வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் இருந்தால் வர்த்தக வாய்ப்புகளும் மேம்படும். இதில் பொதுத்துறை முன்னணி வகிக்கிறது.
“இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்தை வலியுறுத்தும் நிறுவனங்களே அரசாங்க ஒப்பந்தங்களைத் தம்வசப்படுத்த அதிக வாய்ப்பு பெறுகின்றன. பெரிய அரசாங்கத் திட்டங்களுக்கும் இத்தகைய ஒப்பந்ததாரர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படுகின்றன,” என அவர் கூறினார்.
பொதுத்துறையைப் போலவே, தனியார் துறையிலும் இத்தகைய உத்திகள்மூலம் வேலையிடப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் இப்புதிய தூதர் திட்டத்தை வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் (WSH Council) துவங்கியுள்ளது.
“விரிவான விநியோகச் சங்கிலி கொண்டிருக்கும் இந்த 18 நிறுவனங்களை இத்திட்டத்தின் தொடக்கத் தூதர்களாக இணைப்பதன்மூலம் பற்பல ஒப்பந்ததாரர்களைச் சென்றடையலாம் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் அம்மன்றத் தலைவர் அபு பகர்.
‘வேலையிடப் பாதுகாப்பை வலியுறுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுரிமை’
வேலையிடப் பாதுகாப்பை மேம்படுத்தச் சில வழிகாட்டுதல்களைத் தூதர்களிடம் இத்திட்டம் முன்வைக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
வேலையிடப் பாதுகாப்பை வலியுறுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கே முன்னுரிமையும் வெகுமதிகளும் வழங்குதல், தம்மோடு செயல்படும் ஒப்பந்ததாரர்கள் குறைந்தது ‘பிஸ்சேஃப்’ தரநிலை 3, போன்ற பாதுகாப்புச் சான்றிதழ்கள் வைத்திருப்பதைக் கட்டாயப்படுத்துதல் போன்றவை இவ்வழிகாட்டுதல்களில் அடங்கும்.
ஒப்பந்தங்களை வழங்கும்போது, குறைந்தபட்சம் 5 விழுக்காட்டு முக்கியத்துவத்தை வேலையிடப் பாதுகாப்புக்குக் கொடுப்பதும் தம் ஒப்பந்ததாரர்களை மேம்படுத்த வேலையிடப் பாதுகாப்பு குறித்த பயிற்சிகளை வழங்குவதும் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளில் உள்ளன.
“நாங்கள் தொடக்கத்திலேயே முக்கியச் செயல்பாட்டுக் குறியீடுகளைக் காணமாட்டோம். எங்கள் தூதர்கள் எத்தனை பயிற்சிகள், வெகுமதிகளை வழங்குகின்றன, ‘கைசன்’ போன்ற கட்டமைப்புகளைப் பயன்படுத்துகின்றனரா போன்றவற்றை முதலில் கண்காணிப்போம்,” என்றார் திரு அபு பகர்.
‘விநியோகச் சங்கிலி முழுதும் பாதுகாப்படையும்’
தூதராகத் தொடங்கும் ‘பிசிஎஸ்’ (PCS) நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் சங்க உறுப்பினர் கொர்னீலியஸ் லியோ, இத்திட்டத்தை வரவேற்றார்.
“இத்திட்டத்தில் உறுப்பினராக இருப்பதோடு நின்றுவிடாமல், அந்த பாதுகாப்பு நெறிகளை நம் ஒப்பந்ததாரர்களிடமும் எடுத்துச்செல்வது முக்கியம்.
“பாதுகாப்பில் சிறக்கும் ஊழியர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் என்டியுசி பற்றுச்சீட்டுகளும் வழங்குகிறோம்,” என்றார் ‘பிசிஎஸ்’ நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான ஃபோஸ்டர் ஆசிய பசிபிக் நிறுவனத்தில் பாதுகாப்புப் பொறியாளராகவும் பணியாற்றும் கொர்னீலியஸ்.
‘குறைந்த வேலையிடச் சம்பவங்கள் என்றால் பாதுகாப்பான வேலையிடம் என்றாகாது’
“உடலளவிலும் மனதளவிலும் தகுந்த முதலுதவி வழங்குவோர் உள்ளனரா போன்ற அளவுகோல்கள்களைக் கவனிப்பதன்மூலம் இத்திட்டம், வேலையிடங்கள் உண்மையிலேயே பாதுகாப்பானவையா என்பதைக் கண்டறியும்,” என்றார் ‘த்சாவ்’ அறக்கட்டளை (Tsao Foundation) கற்றல், பண்பாட்டுத் தலைவர் டாக்டர் மலீனா சுப்பையா.
‘மெத்தனப்போக்குக் குறையும்’
இத்திட்டம், தம் நிறுவனத்தை மெத்தனப் போக்கிலிருந்து தற்காத்துக்கொள்ள வழிவகுக்கிறது என்றார் ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ ஒப்பந்ததாரரான ‘டேலன்ஸ் தொழில்நுட்பங்கள்’ நிறுவனத்தின் இயக்குநர் டான் கியன் சாய்.
“அனைத்துப் படிவங்களிலும் கையெழுத்திட்டால்கூட சில மாதங்களில் மெத்தனம் வந்துவிடும். ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ எங்களை இதுபோன்ற மாநாடுகளுக்கு அனுப்புவதால் பாதுகாப்பு பற்றி நாங்கள் தொடர்ந்து நினைவுகொள்கிறோம்,” என்றார் அவர்.
நல்ல திட்டங்களைத் தொடர ஊக்கம்
“நாங்கள் தற்போது ‘பிஸ்சேஃப்’ தரநிலை 4ல் உள்ளோம், கூடிய விரைவில் நட்சத்திரத் தரநிலையை எட்டிவிடுவோம். நாங்கள் ஏற்கெனவே மாதந்தோறும் நடக்கும் கலந்துரையாடல்கள்வழி வேலையிடப் பாதுகாப்பைக் குறித்து ஆலோசிக்கிறோம். இத்தூதர் திட்டமும் நாங்கள் செல்லும் திசையும் ஒத்துபோகின்றன,” என்றார் எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் ஒப்பந்ததாரரான ‘டிஎன்டிஎஸ்’ செயல்திட்ட இயக்குநர் ஜோஷுவா டான்.
“எங்கள் ஒப்பந்ததாரர்கள் ‘பிஸ்சேஃப்’ தரநிலை மூன்றை எட்டினால்தான் அவர்களைப் பணியமர்த்துவோம். வேலையிடப் பாதுகாப்பில் கவனம் செலுத்தாத ஒப்பந்ததாரர்களை அடையாளங்கண்டு தவிர்க்க, மனிதவள அமைச்சுடனும் சரிபார்க்கிறோம். தூதராக நாங்கள் ஒப்பந்ததாரர்களுடன் தலைசிறந்த வழிமுறைகளைப் பகிர்வோம்,” என்றார் எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து வர்த்தகத் தலைமை நிர்வாகி டியன் ஹாக் லிம்.