உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 18 வாகன ஓட்டிகள் பிடிபட்டனர்

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 18 வாகன ஓட்டிகள் பிடிபட்டனர்

2 mins read
2b0f4519-9b8f-4d9b-8a9b-88eab5e1bca5
போக்குவரத்து விதிகளை மீறியோர், வரிசையில் இடையில் புகுந்தோர், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியோர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நிலவழிச் சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் போக்குவரத்துச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் சரியான தடத்தில் செல்ல வேண்டும் என்றும் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் (ICA) அறிவுறுத்தியுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின்போது போக்குவரத்து விதிமீறல்களுக்காக 18 வாகன ஓட்டிகள் பிடிபட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 3 முதல் 5 வரையிலான மூன்று நாள்களில், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் போக்குவரத்து விதிகளை மீறுவோர், வரிசையில் இடையில் புகுவோர், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுவோர் ஆகியோருக்கு எதிராக ஆணைய அதிகாரிகள் தங்களது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.

இது குறித்து வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

சிங்கப்பூரிலிருந்து வெளியேற முயன்றபோது மொத்தம் 15 வாகன ஓட்டிகள் பிடிபட்டனர். அவர்கள் இரட்டை வெள்ளைக் கோடுகளைத் தாண்டியது, சட்டவிரோதமான முறையில் வலப்பக்கம் திரும்பியது, போக்குவரத்து விளக்குச் சமிக்ஞைகளை மீறியது, மற்றவர்களுக்கு இடையூறு அல்லது ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தியது போன்ற குற்றங்களுக்காகப் பிடிபட்டனர்.

அவர்களில் 11 வாகன ஓட்டிகள் வரிசையின் கடைசியில் நிற்குமாறு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இரட்டை வெள்ளைக் கோடுகளைத் தாண்டியது, வரிசையின் இடையில் புகுந்தது போன்ற குற்றங்களுக்காக வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட நான்கு வாகனங்களின் ஓட்டுநர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

மேல்நடவடிக்கைக்காக 12 வாகன ஓட்டிகள் போக்குவரத்துக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது இரட்டை வெள்ளைக் கோடுகளைத் தாண்டியது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக மூன்று வாகன ஓட்டிகள் பிடிபட்டனர். அவர்களும் போக்குவரத்துக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்