மனைவி சிறைக்குச் சென்றிருந்த வேளையில்,வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்திய ஆடவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
10 வயது முதல் 13 வயதுவரை அந்த ஆடவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அச்சிறுமிக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இப்போது 50 வயதாகும் அந்த ஆடவர் பாலியல் வன்கொடுமை தொடர்பில் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டையும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான மற்றொரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கும்போது. மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
அந்த ஆடவர் 2015இல் சிறுமியின் தாயாரை பாத்தாமில் திருமணம் செய்துகொண்டதாகவும் 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் சிங்கப்பூரில் உள்ள ஒரு வீட்டில் குடிபுகுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி அந்தத் தாயாருக்கு 14 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனால் தன் மகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அந்த ஆடவரிடம் அவர் ஒப்படைத்தார்.
தாயார் சிறைக்கு ஏன் சென்றார் என்பதற்கான காரணத்தை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.

