$181 மில்லியன் பொருள், சேவை வரி மோசடி; இருவர்மீது குற்றச்சாட்டு

$181 மில்லியன் பொருள், சேவை வரி மோசடி; இருவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
d9da5c89-ee96-44c6-95ab-3cd3b6e3d548
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடமிருந்து $11.8 மில்லியனைப் பெற மூன்று போலியான பொருள், சேவை வரி தொகைக்கான ஆவணங்களை ஆடவர்களில் ஒருவர் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. - படம்: சாவ்பாவ்

பொருள், சேவை வரி தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு ஆடவர்கள்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் கிட்டத்தட்ட $181 மில்லியன் தொகையை ஏமாற்றியதாக நம்பப்படுகிறது.

பொருள், சேவை வரிக்கான தொகையை வசூலித்த அந்த வர்த்தகர்கள் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்துக்கு வரி செலுத்தாமல் தாங்கள் வாங்கிய பொருள்களுக்குச் செலுத்திய பொருள், சேவை வரியை ஆணையத்திடமிருந்து பெற முயன்றதாகக் கூறப்படுகிறது.

40 வயது டெரிக் இயோ வெய் கின், 73 வயது இயோ கியன் ஹுவாட் ஆகிய இருவரும் நான்கு ‌போலி நிறுவனங்களை அமைத்து, 2017 நவம்பருக்கும் 2018 ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவற்றை மோசடி வர்த்தகங்களுக்காகப் பான்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் தந்தை, மகன் என்று அறியப்படுகிறது.

அந்த ஆடவர்கள் ஒரு நிறுவனத்திடமிருந்து மற்றொரு நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட $181 மில்லியன் மதிப்புடைய பொருள்களை விற்றதாக நம்பப்படுகிறது.

அந்த விற்பனைகளும் கொள்முதல்களும் போலி பரிவர்த்தனைகள் என்று சந்தேகிக்கப்படுகிறது. சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடமிருந்து பொருள், சேவை வரிக்கான தொகையை மீட்க ஆடவர்கள் அந்தப் போலி பரிவர்த்தனைகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

40 வயது இயோ, ஆணையத்திடமிருந்து $11.8 மில்லியனைப் பெற மூன்று போலியான பொருள், சேவை வரி தொகைக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகத் தெரிகிறது.

அவர் விநியோகிப்பாளரின் விலைப்பட்டியலில் போலிக் கையெழுத்திட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆடவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏழாண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
மோசடிபொருள் சேவை வரிவர்த்தகம்ஆடவர்