வர்த்தகப் பணப் பரிவர்த்தனை மோசடியில் $19 மில்லியன் இழப்பு

வர்த்தகப் பணப் பரிவர்த்தனை மோசடியில் $19 மில்லியன் இழப்பு

சித்திரிப்புப் படம்: சாவ்பாவ்

21 May 2026 - 9:58 am

1 mins read

வர்த்தக மின்னஞ்சல்வழி நிகழ்த்தப்படும் பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பாக இவ்வாண்டு ஜனவரி முதல் குறைந்தபட்சம் 66 சம்பவங்கள் குறித்துப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மோசடிகளில் குறைந்தபட்சம் $19 மில்லியன் பறிபோயுள்ளது என்று புதன்கிழமை (மே 20) காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளர்களின் பணம் செலுத்தும் கணக்கு விவரங்களை மாற்றுமாறு கோரும் அதுபோன்ற மோசடிகளுக்கு எதிராகப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

கணக்கு விவரங்களை மாற்றிய பின்னர் வர்த்தகங்கள் அனுப்பும் தொகை அத்தனையும் மோசடியான வங்கிக் கணக்குகளுக்குத் திருப்பிவிடப்படும்.

போலியான மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துவதன் மூலமோ விற்பனையாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ஊடுருவுவதன் மூலமோ பாதிக்கப்பட்டவர்களின் சக ஊழியர்கள் அல்லது விற்பனையாளர்கள் போல் மோசடிக்காரர்கள் ஆள்மாறாட்டம் செய்வர்.

விற்பனையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் தகவல் தெரிவிப்பார்கள்.

மேலும், இனி அனுப்பும் தொகைகளை ஒரு புதிய வங்கிக் கணக்கில் செலுத்துமாறு அவர்களுக்கு அறிவுறுத்துவார்கள்.

மோசடியில் தாங்கள் ஏமாற்றப்பட்ட விவரம், தங்கள் சக ஊழியர்களிடமோ விற்பனையாளர்களிடமோ அந்தப் பணப் பரிமாற்றங்கள் குறித்து விசாரித்த பின்னரே அவர்களுக்குத் தெரியவரும்.

அல்லது தங்களுக்குப் பணம் வந்து சேரவில்லை என விற்பனையாளர்கள் தெரிவித்த பின்னரே மோசடி நிகழ்ந்திருப்பது தெரியவரும் என்று காவல்துறை விளக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
வர்த்தகம்மோசடிகாவல்துறை