சிங்கப்பூரில் 19 வாகன நிறுத்துமிடங்களில் மின்சார வாகனங்களுக்கு வேகமாக மின்னூட்டும் மின்னூட்ட வசதிகள் (EV fast charger) அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய அந்த 19 வாகன நிறுத்துமிடங்களில் அத்தகைய 38 வசதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றில் ஆகக் கடைசியாக மின்னூட்டிகள் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள ஃபாஜார் கடைத்தொகுதியிலும் ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள தாமான் ஜூரோங் கடைத்தொகுதியிலும் மின்னூட்ட வசதிகள் அமைக்கப்பட்டு வந்துள்ளன. அவை கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி செயல்படத் தொடங்கின.
சென்ற ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மின்சார வாகனங்களுக்கு வேகமாக மின்னூட்டும் மின்னூட்ட வசதிகள் அமைக்கப்பட்டன. இப்போது அந்நடவடிக்கை நிறைவடைந்துவிட்டது.
அந்நடவடிக்கையில் முதலில் உட்லண்ட்ஸ் சிவிக் நிலையத்தில் மின்னூட்டிகள் பொருத்தப்பட்டன.
வேகமாக மின்னூட்டும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் பெரும்பாலானவை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துக்குச் (வீவக) சொந்தமான வர்த்தகக் கட்டடங்களில் அமைந்துள்ளன. அதற்க ரெவன்யூ ஹவுஸ் கட்டடம் விதிவிலக்கு. அக்கட்டடம், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்துக்குச் சொந்தமானது.
உட்லண்ட்சில் உள்ள 888 பிளாசா, புக்கிட் மேராவில் உள்ள கனெக்ஷன் ஒன், குவீன்ஸ்டவுனில் உள்ள டாசன் பிளேஸ் உள்ளிட்ட இடங்களில் மின்சார வாகனங்களுக்கு வேகமாக மின்னூட்டும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

