திரு ஃபைருஸ் ரோஸ்லான் என்ற 19 வயது இளைஞர், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் முழு நேர தேசிய சேவையாளராக இருந்தார். இந்த மாதம் 14ஆம் தேதி வந்தால் அவருக்கு வயது 20.
அதைச் சிறப்பாகக் கொண்டாட திரு ஃபைருஸ் குடும்பம் திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை நேரத்தில், ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 1ல் தன் வீட்டுக்கு அருகில், திரு ஃபைருஸ் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுகொண்டு இருந்தபோது வழியில் டாக்சி ஒன்றுடன் மோதி அவர் வாகனம் விபத்துக்குள்ளாகிவிட்டது.
பலத்த காயம் அடைந்த அந்த இளைஞர் அடுத்த நாள் மரணம் அடைந்தார். விபத்து நிகழ்ந்தபோது அந்த இளைஞர் பணியில் இல்லை. ஓய்வில் இருந்தார்.
திரு ஃபைருஸுக்கு இரண்டு வயது மூத்த அண்ணன் இருக்கிறார். அண்ணன்-தம்பி இருவரும் பாசம் மிக்கவர்கள்.
தம்பி மரணமடைந்தது முதல் அண்ணன் மயக்கம் வரும் வரை அழுதுகொண்டே இருந்தார். தம்பியின் படத்தைப் பார்த்துப் பார்த்து அவர் கண்ணீர் விட்டபடியே இருக்கிறார் என்று குடும்ப உறுப்பினர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
திரு ஃபைருஸ் குரலை உயர்த்திக் கூட பேசமாட்டார். மிகவும் பணிவானவர். அவர் பள்ளிக்கூடத்தில் படித்தபோது அண்ணன் பகுதி நேர வேலை பார்த்து குடும்பத்திற்கு உதவினார்.
திரு ஃபைருஸ் மரணம் அடைந்ததை அடுத்து அவரின் குடும்பம் மிகுந்த கவலை அடைந்துள்ளது. மனதைத் தேற்றிக் கொண்டு தெம்புடன் இருக்க குடும்பம் முயன்று வருவதாக அந்தக் குடும்ப உறுப்பினர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
திரு ஃபைருஸ் குடும்பத்திற்கு உதவி செய்து வருவதாகவும் ஆதரவு அளித்து வருவதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இதனிடையே, அலட்சியமாக வாகனம் ஓட்டியதற்காக 35 வயது டாக்சி ஓட்டுநர் ஒருவர் கைதாகி இருப்பதாகவும் விசாரணை தொடர்வதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

