தந்தையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த பதின்ம வயது ஆடவர், சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவரைக் குத்தி அவரது மூக்கை முறித்தார்.
பொது ஊழியருக்கு வேண்டுமென்றே கடுமையான காயத்தை விளைவித்த குற்றத்தை அந்த 19 வயது இளையர், ஜூலை 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
பெண் ஒருவரின் அரை நிர்வாணப் படத்தை அவரது அனுமதியின்றி மற்றொருவருக்குப் பகிர்ந்த குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.
படம் சம்பந்தப்பட்ட குற்றத்தைப் புரிந்தபோது அவருக்கு 17 வயது என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
பிள்ளைகள் மற்றும் இளம் நபருக்கான சட்டத்தின்கீழ் 18 வயதுக்கும் குறைவாக உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்.
இளையருக்கும் அவர் தந்தைக்கும் இடையே சண்டை மூண்டதற்கு முன்னர் அவர்கள் மது அருந்தியதாக அரசுதரப்பு வழக்கறிஞர் ஸேவியர் டான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2024 ஜூன் 5ல் பிற்பகல் கிட்டத்தட்ட 3 மணிக்கு அந்தச் சண்டை நடந்தது. வீட்டை அசுத்தம் செய்ததற்காக தந்தை மீது மகன் கோபப்பட்டு அவரை அடித்ததாகக் கூறப்பட்டது. அவர்கள் இருவரையும் இளையரின் தாயாரும் இரண்டு சகோதரிகளும் சாந்தப்படுத்த முயன்றபோதும் பயனில்லை.
ஒருவரையொருவர் வார்ப்பட்டை, கழி ஆகியவற்றைப் பயன்படுத்தி அடித்துக்கொண்டதாக சகோதரிகளில் ஒருவர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரிகள் அந்த வீட்டுக்கு வந்தபோது இளையரைச் சமாதானப்படுத்த முயன்றார். அந்த முயற்சியில் அதிகாரிகளில் ஒருவர் இளையரால் மூக்கில் குத்தப்பட்டார். மற்றொருவர் டேசர் துப்பாக்கியைப் பயன்படுத்தி இளையரைக் கட்டுப்படுத்தினார். சம்பவ இடத்தில் இளையர் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் மாதம் அந்த இளையருக்குத் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.