அடித்துத் துன்புறுத்தப்பட்டதால் உயிரிழந்த நான்கு வயது சிறுமியின் தாய்க்கு 19 ஆண்டு சிறைத் தண்டனையும் அந்தப் பெண்ணின் காதலருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளன.
மேகன் கங் எனப்படும் அந்தச் சிறுமியை தாய் ஃபூ லி பிங், 29, காதலர் வோங் ஷி ஸியாங், 38, ஆகிய இருவரும் தொடர்ந்து துன்புறுத்தியது காணொளியில் பதிவாகி இருந்தது.
படுக்கையிலும் இருக்கையிலும் சிறுமி மேகன் சிறுநீர் கழித்ததும் இருவரும் மாறி மாறி அடித்துள்ளனர். சில வேளைகளில் உதைத்துள்ளனர்.
தாங்கள் வசித்த பாய லேபார் கொண்டோமினிய வாடகை வீட்டின் தாழ்வாரத்தில் அந்தச் சிறுமியை உறங்க வைத்துள்ளனர்.
போதுமான உணவும் அணிந்துகொள்ள உடையும் அந்தச் சிறுமிக்குத் தரப்படவில்லை.
மலம் கழித்ததை தாயிடம் தெரிவிக்காததால் மலம் நிறைந்த டயப்பரைக் கழற்றி சிறுமியின் தலையில் அவர்கள் வைத்தனர்.
குப்பைத்தொட்டியில் இருந்த உணவைச் சாப்பிடுமாறு சிறுமியை அவர்கள் வற்புறுத்தினர்.
ஓராண்டு காலத்திற்கு மேலாக அந்தக் கொடுமை நீடித்தது.
தொடர்புடைய செய்திகள்
2020 பிப்ரவரி 21ஆம் தேதி சிறுமியின் வயிற்றில் காதலர் வோங் உதைத்தார். அதே நாளில், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் செய்த கொடுமைகள் உச்சக்கட்டம் அடைந்து அச்சிறுமியின் உயிரைப் பறித்தன.
அதன் பின்னர், சடலத்தை ஆதாரமின்றி எப்படி மறைப்பது என்று அவ்விருவரும் ஆராய்ந்தனர். ஒருவழியாக 2020 மே 8ஆம் தேதி உலோக பீப்பாய் ஒன்றில் சிறுமியின் சடலத்தை எரித்தனர். எரிக்கப்பட்ட சாம்பல் இதுவரை மீட்கப்படவில்லை.
குழந்தைக் கொடுமை, சிறுமியின் மரணத்தை அனுமதித்தது, விசாரணையில் இருந்து தப்ப சடலத்தை வேண்டுமென்றே அப்புறப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை தாய் ஃபூ லி பிங் பிப்ரவரி 28ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 3) தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது அந்தப் பெண் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.
அவரது காதலர் வோங்கிற்கு 30 ஆண்டு சிறைத்தண்டனையும் 17 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மரணத்தை விளைவித்த குற்றம் புரிதல், வேண்டுமென்றே சடலத்தை அப்புறப்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் உட்கொள்ளுதல் ஆகிய குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.

