பொழுதுபோக்குக் கூடங்களில் மின்சிகரெட்: 195 பேர் சிக்கினர்; 340 சாதனங்கள் பறிமுதல்

1 mins read
8d554876-f6ea-426e-8ae5-81c6ab53d8cb
அதிகாரிகளின் சோதனையில் சிக்கியவர்கள். - படம்: சிங்கப்பூர் காவல்துறை/சுகாதார அறிவியல் ஆணையம்

பொழுதுபோக்குக் கூடங்களில் நடத்தப்பட்ட பல்வேறு அமலாக்கச் சோதனைகளில் மின்சிகரெட் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் 195 பேர் சிக்கினர்.

 அவர்களிடம் இருந்து 340 மின்சிகரெட் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்குக்கூடங்கள் மற்றும் இசைக்கூடங்களில் இரு வார காலம் 16 அமலாக்கச் சோதனைகள் நடத்தப்பட்டன. 

காவல்துறை, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியன இணைந்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்று உள்ளன.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, காவல்துறை, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த 270க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மின்சிகரெட் வேட்டையில் ஈடுபட்டனர்.

தீவு முழுவதும் உள்ள 151 பொழுதுபோக்குக் கூடங்களில் 1,600க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மின்சிகரெட்டை ஒழிக்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை ஆதரிக்க உள்துறைக் குழு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் தேடுதல் வேட்டை இடம்பெற்றது.

சோதனையில் 195 பேர் பிடிபட்டனர். அவர்கள் 17 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

சிங்கப்பூரில் மின்சிகரெட் புகைக்கும் பழக்கத்தை துடைத்தொழிக்கும் முயற்சியாக, செப்டம்பர் 1 முதல், ‘எட்டோமிடேட்’ விநியோகிப்பாளர்களுக்கு அதிகபட்சமாக 15 பிரம்படிகளும் 20 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

18 வயதுக்குட்பட்டவர்கள் முதல்முறையாக ‘எட்டோமிடேட்’ பயன்படுத்தினால் $500 அபராதமும் பெரியவர்களுக்கு $700 அபராதமும் விதிக்கப்படும். இருதரப்பினருக்கும் தலா $200 அபராதம் உயர்த்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்