ஆண்டுதோறும் ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’, ‘த பிஸ்னஸ் டைம்ஸ்’ இணைந்து நடத்தும் ‘சைல்ட்எய்ட்’ (ChildAid) நிகழ்ச்சியின் 20வது பதிப்பான இவ்வாண்டில் $2,083,430 வெள்ளி நிதி திரட்டப்பட்டது.
இந்நிதித்திரட்டுக்காக ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் இளம் கலைஞர்கள் இணைந்து நடத்தும் இசை, நடன, நாடக அங்கங்கள் இவ்வாண்டு ‘த ட்ரீம் எம்போரியம்’ (The Dream Emporium) எனும் கருப்பொருளில் நடைபெற்றது. ஆறு வயதுமுதல் 19 வயது வரையுள்ள 83 இளம் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நவம்பர் 30ஆம் தேதியன்று எஸ்பிளனேட் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் சிறுவர்களின் ஆடல், பாடல்களுடன் கனவுகள் மெய்ப்படும் மாய உலகம் போல அமைந்த இந்த நிகழ்ச்சி, பார்வையாளர்களின் பேராதரவைப் பெற்றது.
யுஓபி வங்கி, டிடிஜே டிசைன் & என்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட், எம்இஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி திரு முகமது அப்துல் ஜலீல் உள்ளிட்ட நிதித் திரட்டுக்கு ஆக அதிக நன்கொடை வழங்கியுள்ளோருக்கு நிகழ்ச்சியில் சிறப்பு செய்யப்பட்டது.
“இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருமே அசாத்திய திறமையாளர்கள். பயிற்சி மேற்கொண்டவாறே சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளனர். இது பெருமையளிக்கிறது,” என்றார் இதனை எழுதி இயக்கிய கிரிஷ் நடராஜன், 29.
“பெருங்கூட்டத்திற்கு முன்பு தோன்றி நடிப்பது குறித்து பயமாக இருந்தாலும், அதனை நன்கு செய்து முடித்துள்ளோம். அனைவரும் வாழ்த்தியது மகிழ்ச்சியளித்தது,” என்றனர் இதில் பங்கேற்ற மாணவிகள் திவ்யஶ்ரீ, அனாயா, தேவிஷா.
கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கி 20 ஆண்டுகளாகப் பல்வேறு மாணவர்களுக்கு உதவி வரும் இந்நிதித்திரட்டின் வாயிலாகப் பயனடைந்தோரின் காணொளிப் படத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
தொடர்புடைய செய்திகள்
திரட்டப்பட்ட இந்த நிதி, எஸ்டி பள்ளி கைச்செலவு நிதிக்கும் பிசினஸ் டைம்ஸ் ‘இளம் கலைஞர்கள்’ (Budding Artists) நிதிக்கும் பயன்படுத்தப்படும். எஸ்டி பள்ளி கைச்செலவு நிதி வசதிகுறைந்த சிறார்களுக்குக் கைக்காசு வழங்குகிறது. கலைஞர்கள் நிதி மூலம் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள், இளையர்கள் கலைத்துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற உதவி பெறலாம்.

