‘பசுமை’ முறி மூலம் பெற்ற $2.1 பில்லியன் ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்குத் தீவு ரயில் பாதைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

‘பசுமை’ முறி மூலம் பெற்ற $2.1 பில்லியன் ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்குத் தீவு ரயில் பாதைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

2 mins read
688b07e4-32a9-432c-9413-b20480ae7af1
ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்குத் தீவு ரயில் பாதை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட $2.1 பில்லியன் 50 ஆண்டுகால பசுமை அரசு கடன் பத்திர (உள்கட்டமைப்பு) முறிகள் மூலம் திரட்டப்பட்டது. - படம்: சாவ் பாவ்

அரசாங்கம் வழங்கிய ‘பசுமை’ முறிகள் மூலம் திரட்டப்பட்ட மொத்தம் $2.1 பில்லியன் நிதி, இப்போது கட்டுமானத்தில் உள்ள ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்குத் தீவு ரயில் பாதைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030ன் ‘நீடித்த நிலைத்தன்மையான வாழ்க்கை’ எனும் இலக்குக்கு இரு பாதைகளும் ஆதரவளிக்கின்றன என்று நிதி அமைச்சு கூறியது. இந்தத் தொகை, 2023 நிதியாண்டில் வழங்கப்பட்டதாக புதன்கிழமை (செப்டம்பர் 25) அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தனியார் போக்குவரத்து விருப்பங்களுக்கு மாறாக உச்ச நேரங்களில் 75 விழுக்காடு பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை இந்த பாதைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. தற்போது அது கிட்டத்தட்ட 64 விழுக்காடாக உள்ளது.

ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்குத் தீவு ரயில் பாதைகள் முழுமையாகச் செயல்படும்போது குறைந்தது 22,000 கார்களையாவது சாலைகளில் இருந்து அகற்றுவதற்குச் சமமான மொத்த கரிமச் சேமிப்பை வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட $2.1 பில்லியன், செப்டம்பர் 2023ல் மீண்டும் திறக்கப்பட்ட 50 ஆண்டு பசுமை அரசு பங்கு (உள்கட்டமைப்பு) முறிகள் மூலம் திரட்டப்பட்டது, இது $2.8 பில்லியன் வழங்கீடு அளவைக் கொண்டுள்ளது.

$2.1 பில்லியன் தொகையானது, ஆகஸ்ட் 2022ல் வழங்கப்பட்ட முதல் தொகுதி முறிகளிலிருந்து $1.7 பில்லியனையும் மீண்டும் வெளியிடப்பட்ட தொகுப்பிலிருந்து $400 மில்லியனையும் உள்ளடக்கியது.

எஞ்சிய நிதி 2025 நிதி ஆண்டு இறுதியில் முழுமையாக ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சிங்கப்பூர் பசுமை முறி கட்டமைப்பு, நாட்டின் நீடித்தநிலைத்தன்மை முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவும், கரிம வெளியீடற்ற இலக்கை அடைவதற்கான திட்டங்களில் முதலீடுகளை வழிநடத்தும் சிங்கப்பூர் முயற்சிகளுக்கும் முக்கியத் தூணாக உள்ளது,” என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பசுமை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்க 2030ஆம் ஆண்டுக்குள் $35 பில்லியன் வரையிலான பசுமை முறிகளை அரசாங்கம் வெளியிடும் என்று 2022ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்