சூதாட்டம் சார்ந்த மோசடியில் $2.2 மி. இழப்பு: ஆடவர்மீது 3 குற்றச்சாட்டுகள்

சூதாட்டம் சார்ந்த மோசடியில் $2.2 மி. இழப்பு: ஆடவர்மீது 3 குற்றச்சாட்டுகள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Oct 2026 - 5:39 pm

2 mins read

சூதாட்டப் பழக்கம் உள்ளோருக்கு கடன் வழங்கி அதில் லாபம் பெறலாம் என்று கூறி ஆடவர் பலரை ஏமாற்றியுள்ளார்.

அவ்வாறு அவர் $2.2 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை மோசடியாகப் பெற்றுள்ளார். அவர்மீது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஒங் கா கியோங் என்ற அந்த 54 வயது சிங்கப்பூரர், முதலீட்டுத் திட்டம் என்ற பெயரில் மூவரை ஏமாற்றியுள்ளார். ஒவ்வொரு குற்றச்சாட்டிலும் $30,000 முதல் ஏறக்குறைய $1.8 மில்லியன் வரை சம்பந்தப்பட்டுள்ளது.

அந்த சம்பவங்கள் 2024 டிசம்பர் முதல் 2025 அக்டோபர் மாதம் வரையில் நடந்துள்ளன.

ஆடவரது வழக்கு நவம்பர் 6ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

காவல்துறை அறிக்கையின்படி சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு கடனுதவி வழங்கும் முதலீட்டுத் திட்டத்தில் ஒரு பெண்ணை சிங்கப்பூர் ஆடவர் அறிமுகப்படுத்தியதாக 2025 ஜூலை மாதத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டோர் தோற்றாலும் வென்றாலும் முதலீடு செய்வோர் லாபம் ஈட்டுவது உறுதி என்று அந்த மாதுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டது.

ஓங் ஒரு முதலீட்டு ஒப்பந்தத்தை தயாரித்து, அந்த மாதிடம் வழங்கி அவரிடம் பலமுறை பணத்தைப் பெற்றதாக குற்றப்பத்திரிகையில் உள்ளது. அந்த ஒப்பந்தம் உண்மையானது என்று நம்பி மாது வெளியிடப்படாத அளவு பணத்தை ஆடவரிடம் கொடுத்துள்ளார்.

எவ்வித லாபத் தொகையும் தரப்படாத நிலையில், ஆடவரை தொடர்புகொள்ளமுடியாமல் போனபின் இது மோசடி என்பதை அவர் உணர்ந்தார்.

ஆரம்பகட்ட விசாரணையில் அந்த ஆடவர் அதேபோன்ற மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டு, $2.2 மில்லியனைக் கடந்த தொகையை மற்றவரிடம் ஏமாற்றியது தெரியவந்தது.

ஒவ்வொரு மோசடிக் குற்றத்துக்கும் குற்றவாளிக்கு 10 ஆண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைவிசாரணைநீதிமன்றம்தண்டனைசிறைஅபராதம்மோசடிநிதி மோசடிபண மோசடிசூதாட்டம்சூதாட்டக்கூடம்சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம்கடன்முதலீடு