2.4 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $400-$600 ரொக்கம்

2.4 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $400-$600 ரொக்கம்

2 mins read
c90e7b8d-d4fe-4b27-8c8e-3f7d3db6fc8d
தொகை செப்டம்பரில் வழங்கப்படும். - கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் தகுதிபெறும் 2.4 மில்லியனுக்கும் மேலான சிங்கப்பூரர்களுக்கு 400லிருந்து 600 வெள்ளி வரை ரொக்கமாக வழங்கப்படும்.

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினத்தைக் கையாள உதவித்தொகையாக இது வழங்கப்படுவதாக நிதி அமைச்சு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்தது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த நிதியுதவி குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. விலை உயர்வால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ ஒதுக்கப்பட்டிருக்கும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் வெள்ளி நிதியின் ஓர் அங்கமாக இந்த ரொக்கம் வழங்கப்படுகிறது.

இதற்குத் தகுதிபெற ஒருவர் சிங்கப்பூரில் வாழ்ந்துகொண்டிருக்கும் குடிமகனாக இருக்கவேண்டும். 2026ஆம் ஆண்டில் அவருக்கு 21 வயது அல்லது அதைத் தாண்டியிருக்கவேண்டும். அதோடு 2025 நிதி ஆண்டில் வருவாய்க்காகக் கணக்கிடப்படும் ஒருவரின் மொத்த வருமானம் 100,000 வெள்ளியைத் தாண்டியிருக்கக்கூடாது. ஒருவரின் பெயரில் ஒரு சொத்துக்கு மேல் இருக்கவும் கூடாது.

இதற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவரவர் வருமானம், தங்குமிடத்தின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தொகை வழங்கப்படும்.

கவ்பெனிஃபிட்ஸ் இணையத்தளம் வாயிலாக சிங்கப்பூர் குடிமக்கள் இந்த ரொக்கத்தைப் பெறத் தகுதி உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். சிங்பாஸ் கணக்கு விவரங்களைக் கொண்டு அந்த இணையத்தளத்துக்குள் போகலாம்.

தொகையைப் பெறக்கூடிய முறைகள்

தொகையை முன்னதாகவே பெற தங்களின் அடையாள அட்டை எண்ணை ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதிக்குள் பேநவ் கட்டண முறையுடன் இணைக்குமாறு குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஜைரோ முறை வாயிலாகப் பெறுவோருக்கு செப்டம்பர் 17ஆம் தேதிக்குள்ளும் கவ்கே‌ஷ் முறை வாயிலாகப் பெறுவோருக்கு செப்டம்பர் 24ஆம் தேதிக்குள்ளும் தொகை வழங்கப்படும். தகுதிபெறுவோருக்குத் தொகை வழங்கப்படுவதற்கு முன்னரும் பின்னரும் குறுந்தகவல்வழி தெரியப்படுத்தப்படும்.

சிங்பாஸ் கணக்கில் பதிவுசெய்யப்படாத கைப்பேசி எண்ணை வைத்திருப்போருக்கு அவர்களின் அடையாள அட்டையில் உள்ள இல்ல முகவரிக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்படும்.

gov.sgலிருந்து அனுப்பப்படும் குறுந்தகவலில் குடிமக்கள் எவ்வளவு தொகையைப் பெறுவர் என்று மட்டுமே தெரிவிக்கப்படும்.

அதற்குப் பதிலளிக்குமாறோ, இணைய முகவரியை வருடுமாறோ, குறுந்தகவல் அனுப்பியவரிடம் தகவல்களை அளிக்குமாறோ குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை அனுப்புமாறோ, வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்குமாறோ, அரசாங்க அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்கமாட்டார்கள் என்றும் அரசாங்கம் வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்