சொத்துகளை வாடகைக்கு விடுவது தொடர்பான மோசடிச் சம்பவங்களில் இவ்வாண்டு குறைந்தபட்சம் $2.7 மில்லியன் தொகையை சிங்கப்பூர் மக்கள் இழந்துள்ளனர்.
இணையம் மூலம் வாடகை மோசடி நடைபெறுவதாகவும் சொத்து முகவர் என்ற போர்வையில் மோசடிக்காரர்கள் செயல்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதுபோன்ற ஆள்மாறாட்ட மோசடிகள் தொடர்பாக இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 430 புகார்களைச் சொத்துச் சந்தை முகவர் மன்றம் (CEA) பெற்றுள்ளது.
மோசடிக்காரர்கள் சமூக ஊடகத்தளங்களில் வாடகைச் சொத்துகளின் பட்டியலை வெளியிடுவார்கள். அதனை உண்மை என்று நம்பி பொதுமக்கள் அதிலுள்ள எண்களில் தொடர்புகொள்வார்கள்.
உண்மை என்று நம்ப வைக்க சொத்து முகவரின் புகைப்படம், பெயர் தாங்கிய அட்டை, வாடகைச் சொத்தின் படம் அல்லது காணொளியை மோசடிக்காரர்கள் காண்பிப்பர்.
பின்னர், வாடகை ஒப்பந்தங்களை ஏற்படுத்த பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்பதோடு, முன்பணமாக வங்கியிலிருந்து தொகையை அனுப்புமாறு போலி வங்கிக் கணக்குகளைத் தருவர்.
அதன் பிறகு, அவர்களைத் தொடர்புகொள்ள இயலாதபோது தாங்கள் ஏமாற்றப்பட்டதாக பொதுமக்கள் உணர்வார்கள்.
மோசடி இவ்வாறு அரங்கேறுவதாக விளக்கியுள்ள காவல்துறை, வாடகைச் சொத்துகளின் உரிமையாளரை நேரில் சந்தித்து உறுதி செய்த பின்னர் காசோலை அல்லது வங்கிப் பணமாற்றம் மூலம் முன்பணம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது.