சிங்கப்பூரின் திருத்தப்பட்ட வாக்காளர் பதிவேடு சரிபார்க்கப்பட்டு, இப்போது பொதுமக்களின் பார்வைக்குத் தயாராக உள்ளது என்று தேர்தல் துறை ஜூலை 22ஆம் தேதி அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
திருத்தப்பட்ட வாக்காளர் பதிவேட்டின்படி, அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க 2,715,187 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
2023 ஜூலையில் கடந்த முறை, அதாவது 2023 அதிபர் தேர்தலுக்குமுன், வாக்காளர் பதிவேடு திருத்தப்பட்டபோது, 2,709,455 வாக்காளர் இருந்தனர். தற்போதைய எண்ணிக்கையுடன் ஒப்புநோக்க, இது 5,732 குறைவு.
2020ல் நடந்த பொதுத் தேர்தலின்போது 2,651,435 தகுதிபெற்ற வாக்காளர்கள் இருந்தனர்.
திருத்தப்பட்ட வாக்காளர் பதிவேட்டுக்கு ஜூலை 21ஆம் தேதி சான்றளிக்கப்பட்டது என்றும் அது ஜூலை 23ஆம் தேதி முதல் வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் தேர்தல் துறை தெரிவித்தது.
சிங்கப்பூரர்கள் தங்கள் விவரங்களை மின்னணுவியல் முறையில், தேர்தல் துறையின் இணையப் பக்கத்தில் உள்ள, வாக்காளர் சேவைகள் (Voter Services) மூலமாகவோ அல்லது சிங்பாஸ் கைப்பேசிச் செயலி மூலமாகவோ சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும் தேர்தல் துறை கூறியது.
அவ்வாறு செய்ய இயலாதோர், அருகில் உள்ள சமூக மன்றங்கள்/நிலையங்களில் உள்ள ‘சர்வீஸ்எஸ்ஜி’ (ServiceSG) கூடங்களுக்கு நேரடியாகச் சென்று சரிபார்க்கலாம் அல்லது முன்பதிவு செய்து தேர்தல் துறைக்குச் சென்றும் சரிபார்க்கலாம்.
தேர்தல்களுக்கு இடையே வாக்காளர் விவரங்கள் திருத்தப்பட்ட பிறகு, வாக்காளர்கள் அதை சரிபார்ப்பது வழக்கமான நடவடிக்கை என்றும் இதன் மூலம் ஆகக் கடைசி வாக்காளர் விவரங்கள் பதிவேட்டில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும் என்றும் விளக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வாக்காளர் பதிவேட்டில் ஜூன் 1ஆம் தேதி வரையிலான வாக்களிக்க தகுதிபெற்ற சிங்கப்பூரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். 2023 ஜூன் 1ஆம் தேதி முதல் 21 வயதை எட்டிய சிங்கப்பூரர்களும் 2023 ஜூன் 1ஆம் தேதி முதல் குடியுரிமை பெற்றவர்களும் இதில் அடங்குவர்.
கடந்த காலத்தில் பதிவேடு சான்றளிப்புக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்திற்கும் இடையில் நிலையான காலம் எதுவும் இல்லை. ஓர் ஆட்சிக்காலத்தில் வாக்காளர்களின் விவரங்கள் பல முறை சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பதிவேடு திருத்தப்படுகிறது.
2025 நவம்பர் மாதத்துக்கு முன் நடத்தப்படவிருக்கும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் இந்த வாக்காளர் பதிவேடு சரிபார்த்தல் நடவடிக்கை இடம்பெறுகிறது.
சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு தேர்தல் பிரிவுக்கும் வாக்காளர் பதிவேடு உள்ளது. மொத்தத்தில், அனைத்து 31 குழுப் பிரதிநிதித்துவ தொகுதிகள் (GRC) மற்றும் தனித் தொகுதிகளுக்கான (SMC) பதிவேடுகள் குடியரசில் உள்ள அனைத்துத் தகுதியான வாக்காளர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.
கடந்த தேர்தலில் வாக்களித்த தவறியவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டிருக்கும். அவர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் தங்கள் பெயரை பதிவேட்டில் சேர்த்துக்கொள்ள தேர்தல் துறையின் இணையப் பக்கத்தில் உள்ள வாக்காளர் சேவை பிரிவில் விண்ணப்பிக்கலாம்.
அப்படிப்பட்டோர் விரைவில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கும்படி ஆலோசனை கூறப்படுகின்றனர். தேர்தல் சட்டத்தின்படி, தேர்தலை நடத்துவதற்கான உத்தரவாணை (Writ of election) பிறக்கப்பிக்கப்பட்டதிலிருந்து வேட்டுமனுத் தாக்கல் தினத்துக்கு இடையிலான காலத்தில் வாக்காளர்களின் பெயர்கள் பதிவேட்டில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டா.
வாக்காளர் பதிவேட்டிலிருந்து பெயர் நீக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூர்கள் தாங்கள் வசிக்கும் தொகுதியில் போட்டியிருந்தால், அவர்கள் வாக்களிக்க முடியாது.
வாக்காளர் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூரர்கள், அஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ வெளிநாடுகளில் உள்ள வாக்காளிப்பு நிலையங்களில் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் துறை கூறியது.
பெய்ஜிங், கேன்பரா, துபாய், ஹாங்காங், லண்டன், நியூயார்க், சான் ஃபிரான்சிஸ்கோ, ஷாங்காய், தோக்கியோ, வாஷிங்டன் ஆகிய இடங்களில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகங்களில் வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூரர்கள் வாக்களிக்கலாம்.
அவர்கள் தேர்தல் துறையின் இணையப் பக்கம் மூலம் வெளிநாடு வாழ் வாக்காளராக தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் அல்லது வெளிநாட்டில் உள்ள பதிவு நிலையங்களில் நேரடியாகச் சென்று பதிந்துகொள்ளலாம்.