நாடாளுமன்ற எழுத்தர்கள், செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து புதிய ஊக்கத்தொகைக்குத் தகுதிபெறவிருக்கின்றனர். சிறப்புவாய்ந்த அத்தகைய பணியில் உள்ளோரைத் தக்கவைக்க அந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், நாடாளுமன்ற ஊழியர்களில் பெரும்பாலோர் இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து 2 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காட்டுவரையிலான ஊதிய உயர்வைப் பெறுவர்.
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு நிகராக நாடாளுமன்ற ஊழியர்களின் ஊதியமும் உயர்த்தப்படுகிறது.
புதிய மாற்றங்களை நாடாளுமன்றம் ஒருமித்த மனத்துடன் ஏற்றுக்கொண்டது.
நாடாளுமன்ற நாயகர் சியா கியென் பெங்கின் தலைமையிலான நாடாளுமன்ற ஊழியர்கள் ஆணையம், அந்தப் பரிந்துரைகளை முன்வைத்தது. அவை சட்டத்திற்கு உட்பட்டு நாடாளுமன்றத்தின் முடிவிற்காக முன்வைக்கப்பட்டன.
வேலைச் சந்தையின் போட்டித்தன்மைக்கு ஏற்பவும் உலகளாவிய சூழலில் அதிகரித்துவரும் தேவைகளுக்கு இடையே திறமையாளர்களை ஈர்த்து தக்கவைக்கவும் எம்எக்ஸ்எஸ் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஊதியம் மாற்றியமைக்கப்படும் என்று பொதுச் சேவைத் துறை இதற்குமுன் தெரிவித்திருந்தது.
தகுதியுள்ள எம்எக்ஸ்எஸ் அதிகாரிகளுக்கு 2 முதல் 9 விழுக்காடுவரை வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. சந்தை இடைவெளி அதிகமாக உள்ள பதவிகளுக்கு அதிக ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.


