போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு $473,000க்கும் மேலிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து 223 கிராம் ஐஸ், 4.199 கிலோகிராம் கஞ்சா, 2.378 கிலோகிராம் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்றும் அவை 1,860 போதைப்புழங்கிகளுக்கு ஒரு வாரத்திற்குப் போதுமானது என்றும் சிஎன்பி கூறியது.
பூன் கெங் பகுதியில் உள்ள ஒரு தனியார்க் கூட்டுரிமைக் குடியிருப்பில் 42 வயது சிங்கப்பூரரையும் நிரந்தரவாசத் தகுதிபெற்ற 35 வயது மாதையும் அமலாக்க அதிகாரிகள் கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 57 கிராம் ஐஸ், 30 கிராம் கஞ்சா, பத்து எக்ஸ்டசி மாத்திரைகள், இரண்டு எரிமின்-5 மாத்திரைகள் முதலிய போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களின் குடியிருப்பில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4.169 கிலோ கஞ்சா, 2.13 கிலோ ஹெராயின், 145 கிராம் ஐஸ், 104 எரிமின்-5 மாத்திரைகள், எக்ஸ்டசி மாத்திரை, ஆறு போதைப்பொருள் நிறைந்த புட்டிகள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈசூன் ஸ்திரிட் 51க்கு அருகே இருக்கும் அந்தப் பெண்ணின் குடியிருப்பில் இருந்து 21 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.