இருவர் மீது தகவல் பகிர்வு குற்றச்சாட்டு

இருவர் மீது தகவல் பகிர்வு குற்றச்சாட்டு

1 mins read
89824458-c78f-473a-87b9-e8ffc4a314e6
கலையரசன் கருப்பையா (இடது), தமன்தீப் சிங் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) சோதனைகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்காக ஆடவர் இருவர் மீது அலுவல்முறை இரகசியங்கள் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வீவகவில் உயர் சொத்து நிர்வாகியாகப் பணியாற்றிய கலையரசன் கருப்பையா, 54, மீது நீதிமன்றத்தில் இன்று மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கிம் தியான் சாலை, புளோக் 121ல் உள்ள ஒரு வீட்டில் வீவக மேற்கொள்ளவிருந்த சோதனைகள் குறித்து தமன்தீப் சிங் எனும் 22 வயது இந்திய நாட்டவருக்கு கலையரசன் சட்டவிரோதமாகத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

தகவல்களைப் பெற்றதற்காக அவ்வீட்டில் வாடகைக்குக் குடி இருக்கும் தமன்தீப் மீதும் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அலுவல்முறை இரகசியங்கள் சட்டத்திற்கு முரணாக அந்தத் தகவல் பகிர்வுகள் இடம்பெற்றதாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு மே, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் என, கலையரசன் மும்முறை தமன்தீப்பிடம் சோதனை குறித்த தகவலைப் பகிர்ந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றத்திற்கும் அந்த ஆடவர் இருவருக்கும் ஈராண்டுவரை சிறைத் தண்டனையும் $2,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

தமன்தீப்புக்கு $10,000 பிணைத்தொகையுடனும் கலையரசனுக்கு $5,000 பிணைத்தொகையுடனும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இருவரும் அடுத்த மாதம் 8ஆம் தேதி வழக்குக்கு முந்திய கலந்துரையாடலுக்காக நீதிமன்றத்திற்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.