விபத்தில் சிக்கிய பிறகு, தங்கள் வாகனங்களைக் கைவிட்டதாகக் கூறப்படும் இரு வேறு சம்பவங்கள் தொடர்பில் 40 மற்றும் 43 வயதுடைய இரு ஆடவர்கள் மீது புதன்கிழமை (செப்டம்பர் 25) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
அவ்விரு சம்பவங்களில் ஒன்றில், அந்த காரிடம் பதிவுசெய்யப்படாத எண் இருந்தது.
காவல்துறையினர் வந்தபோது, இரு ஆடவர்களும் சம்பவ இடத்தில் இல்லை. பின்னர் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து விசாரித்தபோது, தங்கள் கார்களின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.
விபத்து குறித்து காவல்துறையிடம் அவர்கள் தெரிவிக்கவும் இல்லை.
சிலேத்தார் ஏரோஸ்பேஸ் வேயில் மரம் ஒன்றின்மீது கார் மோதியது தொடர்பில் மே 9ஆம் தேதி அதிகாலை 3.40 மணியளவில் தனக்கு தகவல் வந்ததாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) தெரிவித்தது.
அந்த காரின் எண் பதிவுசெய்யப்படவில்லை. பின்னர் தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட அதன் ஓட்டுநர் 43 வயது ஆடவர் எனக் கண்டறியப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், சிலேத்தார் வெஸ்ட் லிங்கில் போக்குவரத்து வழிகாட்டிப் பலகைமீது கார் ஒன்று மோதியது குறித்து மே 30ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
பின்னர் தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட அதன் ஓட்டுநர் 40 வயது ஆடவர் என அடையாளம் காணப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கச் சொத்துக்குச் சேதம் விளைவிக்கப்பட்ட விபத்துகளில் சிக்கிய வாகனவோட்டிகள், உதவி கோரி காவல்துறையைத் தொடர்புகொள்ள வேண்டும் அல்லது 24 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறை கூறியது.

