சாங்கி விமான நிலையத்தில் திருட்டு; இரண்டு வெளிநாட்டவர்கள் கைது

2 mins read
c74e5bd9-8aeb-4cce-b7ce-6f55031f381d
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 35 வயது ஆண் என்றும் மற்றொருவர் 30 வயது பெண் என்றும் அதிகாரிகள் கூறினர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இருவரும் அமெரிக்கக் குடிமக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 35 வயது ஆண் என்றும் மற்றொருவர் 30 வயது பெண் என்றும் அதிகாரிகள் கூறினர்.

சந்தேகத்திற்குரிய திருட்டுச் சம்பவம் ஜூன் 23ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் உள்ள ‘டிரான்சிட்’ பகுதியில் உள்ள த ‌ஷில்லா காஸ்மெட்டிக்ஸ் & பெர்ஃபியூம்ஸ் (The Shilla Cosmetics & Perfumes) கடையில் நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையில் ஆடவர் மூன்று போத்தல் வாசனை திரவங்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவற்றின் மதிப்பு 488 வெள்ளி. கடையின் ஊழியர் பொருள்களைச் சரிபார்த்தபோது வாசனை திரவங்கள் காணாமல் போனது தெரியவந்தது.

அதன்பின்னர் விமான நிலையத்தில் உள்ள காவல்துறைப் பிரிவு நடத்திய விசாரணையில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சிங்கப்பூரைவிட்டு வெளியேறுவதற்கு முன்னரே அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எப்போது கைது செய்யப்பட்டனர் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

ஆடவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் 3ல் உள்ள கடைகளில் கிட்டத்தட்ட 755 வெள்ளி மதிப்புள்ள இரண்டு பொருள்களைத் திருடியுள்ளார். ஆடவருக்கு உதவியாக 30 வயது பெண் இருந்துள்ளார்.

திருடப்பட்ட ஐந்து பொருள்களையும் அதிகாரிகள் மீட்டனர்.

சந்தேக நபர்கள் இருவர்மீதும் புதன்கிழமை (ஜூலை 23) குற்றஞ்சாட்டப்படும் என்றும் காவல்துறை தெரிவித்தது.

விமான நிலையத்தில் திருடிவிட்டு எளிதாகத் தப்பித்துவிடலாம் என்று வெளிநாட்டுப் பயணிகள் எண்ண வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

கடைகளில் திருடுபவர்கள்மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்