சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு தீவின் கடற்பகுதிக்கு வெளியில் எண்ணெய்க் கப்பல் ஒன்றில் கள்ளத்தனமாக சிலர் ஏறிவிட்டனர் என்று பிப்ரவரி 28ம் தேதி கடலோரக் காவல் படைக்குத் தகவல் கிடைத்தது.
கப்பலில் இருந்து ஐந்தே நிமிட தூரத்தில் காவல் அதிகாரி இன்ஸ்பெக்டர் முகம்மது ரசிடி சுரியாடி தலைமையில் கடலோரக் காவல்படையின் படகு ஒன்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது.
உடனே கப்பலை நோக்கி விரைந்தது காவல் படைப் படகு. கப்பல் சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் நுழைந்ததும் காலை 8.20 மணியளவில் இன்ஸ்பெக்டர் ரசிடியுடன் மேலும் ஐந்து அதிகாரிகள் கப்பலில் ஏறினர். கப்பலின் முதன்மைத் தளத்தில் சிப்பந்தி ஒருவர் வலது கண்ணில் ரத்தக் காயத்துடன் வீழ்ந்து கிடப்பதை அதிகாரிகள் கண்டனர். காயமடைந்த சிப்பந்தியுடன் இரு சக அதிகாரிகளை காவலுக்கு நிறுத்திவிட்டு, திரு ரசிடியும் மீதம் இருந்த மூன்று அதிகாரிகளும் சந்தேக நபர்களைத் தேட ஆரம்பித்தனர்.
அதேசமயம் காயம் அடைந்த சிப்பந்தியைப் பற்றி குடிமைத் தற்காப்பு படையினருக்கு ஏற்கனவே காலை 7.10 மணியளவில் தகவல் கிடைத்தது. வெஸ்ட் கோஸ்ட் கடல்துறை தீயணைப்பு நிலையத்திலிருந்து இரு கடல் தீயணைப்பு, மீட்புக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. பிறகு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அந்த சிப்பந்தி கொண்டுசெல்லப்பட்டார்.
அதே நேரத்தில் காவல் அதிகாரிகள் அனைத்து சிப்பந்திகளையும் சோதனையிட்டனர். சந்தேக நபர்கள் சிப்பந்திகளைப் போல பாவனை செய்வதைத் தவிர்க்க, 20க்கும் மேற்பட்டோரின் கடப்பிதழ்கள் சோதிக்கப்பட்டன. சிப்பந்திகள் கிட்டத்தட்ட ஏழு சந்தேக நபர்கள் கப்பலில் ஏறிவிட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்தும் எண்ணெய்க் கப்பலில் நடந்துகொண்டிக்க, கடலோரக் காவல் படைப் படகு கண்காணிப்புப் பணியைச் செய்தது. சக அதிகாரி சார்ஜன்ட் சுகைரி கைருடின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் படகின்மேல் மின்னொளிப் புகைப்படக் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் வெப்பத்தைக் கொண்டு 360 சுற்றளவில் ஏற்படும் நுண்ணிய அசைவுகளையும் நிகழ்நேரத்தில் கண்டிறியக்கூடிய திறன் அதற்கு உள்ளது.
ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடந்த சோதனைகளுக்குப் பிறகு சந்தேக நபர்கள் யாரும் பிடிபடவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

