நிறுவன இயக்குநர் ஒருவர், தேசிய நூலக வாரியத்திடம் போலி ஒப்பந்தப்புள்ளியைச் சமர்ப்பிக்க தமது நிறுவனத்தை அனுமதித்தார்.
வேறொரு நிறுவனம், $4.7 மில்லியன் மதிப்புக்கும் மேலான ஒப்பந்தத்தை வெல்ல உதவவே அவர் அவ்வாறு செய்தார். அதற்குக் கைம்மாறாக, அந்த நிறுவனம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை தமது நிறுவனத்துக்கு வழங்கும் என அவர் எதிர்பார்த்தார்.
ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், தேசிய நூலக வாரிய உதவி இயக்குநர் ஏட்ரியன் சான் சியூ லெங்கிடம் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியபோது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில், குவா காவ் வீ, சோ லிங் லிங் இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட தலா ஓர் ஊழல் குற்றச்சாட்டை திங்கட்கிழமை (செப்டம்பர் 23) ஒப்புக்கொண்டனர்.
குவாவுக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனையும் சோவுக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன.
குற்றம் புரிந்தபோது கோ, ‘மல்டிமீடியா மேஸ்ட்ரோ’ நிறுவன நிர்வாக இயக்குநரும் அதன் ஒரே பங்குதாரருமாக இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன் முதன்மை தொழிலில் திரையரங்குப் பராமரிப்பும் ஒளிபரப்பு ஆலோசனைச் சேவையும் அடங்கும்.
அந்த நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த சோ, 2019ல் அதன் இயக்குநரானார்.


