புக்கிட் தீமா விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) காலை நிகழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
அந்த விபத்து காரணமாக காலை உச்சநேரத்தில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புக்கிட் தீமா விரைவுச்சாலை வழியான பயணத்தில் தாமதம் ஏற்படலாம் என்று பேருந்து நிறுவனங்கள் அறிவித்தன.
விரைவுச்சாலையின் முதல் இரண்டு தடங்களைத் தவிர்க்குமாறு காலை 7 மணியளவில் நிலப் போக்குவரத்து ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில் கேட்டுக்கொண்டது.
தீவு விரைவுச்சாலையை நோக்கிய புக்கிட் தீமா விரைவுச் சாலையில், கிராஞ்சி விரைவுச்சாலைக்கு முன்னதாக விபத்து ஏற்பட்டு இருப்பதாக விடியற்காலை 5.40 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவ இடத்திலேயே இருவர் மாண்டதாகவும் ஒருவர் காயங்களுடன் உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விரைவுச்சாலையின் முதல் தடத்தில் வெள்ளை நிற லாரி ஒன்று நின்றிருப்பதையும் அதன் பின் சக்கரங்களுக்கு அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று விழுந்து கிடப்பதையும் காட்டும் காணொளி ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
விரைவுச்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால் 40 முதல் 45 நிமிடங்கள் வரை பயணம் தாமதம் ஆகலாம் என்று டவர் டிரான்சிட் பேருந்து நிறுவனம் காலை 8.29 மணிக்கு தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியது. பேருந்து சேவை எண்கள் 171, 963, 966 ஆகியவற்றைக் குறிப்பிட்டு அது அந்தப் பதிவை அது வெளியிட்டது.
அதேபோல, ஈசூன் நோக்கிச் செல்லும் பேருந்து எண் 856ன் பயணம் 20 நிமிடங்கள் வரை தாமதம் ஆகலாம் என்றும் அந்நிறுவனம் வேறொரு பதிவில் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மற்றொரு பேருந்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட்டும் பயணத் தாமதத்தை அறிவித்து இருந்தது.
புக்கிட் தீமா விரைவுச் சாலையை நோக்கிய சிலேத்தார் விரைவுச்சாலையில் செல்லும் பேருந்து சேவை எண்கள் 161 மற்றும் 168 தாமதத்தை எதிர்நோக்குவதாக காலை 9.20 மணியளவில் அது தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.