சட்டவிரோதமாக மலேசியாவுக்குத் தப்பிக்க உதவிய இருவருக்குச் சிறை

சட்டவிரோதமாக மலேசியாவுக்குத் தப்பிக்க உதவிய இருவருக்குச் சிறை

1 mins read
603967dd-a793-4480-9102-c6c3f4e7e061
படம்: - பிக்சாபே

கள்ளச் சிகரெட் கடத்தலில் தொடர்புடைய 32 வயது முகமது இஸ்வான் சே முகமது அப்துல் கோஹாவை துவாஸ் சோதனைச்சாவடி வழியாக சட்டவிரோதமாக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குத் தப்பிச்செல்ல உதவிய இருவருக்குத் தலா 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் மூவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள். இஸ்வானை லாரியின் சரக்குப் பெட்டிக்குள் மறைத்து, சட்டவிரோதமாக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குத் தப்பிச்செல்ல உதவியதாக 26 வயது சரண் ராஜ் லோகநாதன் மற்றும் 44 வயது ரமேஷ் முனுசாமி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இருவரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) ஒப்புக்கொண்டனர்.

இக்குற்றத்தை இவர்கள் ஜூலை 19ஆம் தேதி புரிந்ததாக கூறப்பட்டது.

கள்ளச்சிகரெட்டுகளையும் அதற்குத் தொடர்புடைய பொருள்களையும் சிங்கப்பூருக்குள் கொண்டுவரும்போது இஸ்வான் பிடிப்பட்டதாகவும் இதனால் இவருடைய கடப்பிதழ் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 17ஆம் தேதி இஸ்வான் இக்குற்றத்தைப் புரிந்ததாகவும் இதற்காக இவருக்கு ஏழு மாதச் சிறைத்தண்டனை ஆகஸ்ட் 28ஆம் தேதி விதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

சட்டவிரோதமாக சிங்கப்பூர் எல்லையைக் கடக்க மற்றவர்களுக்கு உதவிய குற்றவாளிக்கு குறைந்தது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் $6,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்