ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மூன்று கார்களும் இரண்டு மோட்டர்சைக்கிள்களும் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த விபத்து பற்றி மாலை 5.55 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்தது எனச் சிங்கப்பூர்க் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
மரினா கடலோர விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் இந்த விபத்து நடந்ததாக அவை மேலும் குறிப்பிட்டன.
இந்த விபத்தில் 20 மற்றும் 48 வயது மதிக்கத்தக்க இரண்டு மோட்டர்சைக்கிளோட்டிகளும் ஒரு மோட்டர்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் காயமடைந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அம்மூவரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர்கள் சுயநினைவோடு இருந்தனர் என்றும் அது மேலும் கூறியது.