தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா நீர்முகப்பை பொலிவூட்டும் பணிகள் தொடக்கம்

2 mins read
4c6ad926-dce3-4ee1-b5ac-0c9f42aa286c
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் நீர்முகப்பு வாழ்க்கைபாணி வளாகத்திற்கான நிலம் திருத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. - படம்: எஸ்பிஎச் மீடியா
multi-img1 of 2

செந்தோசாவுக்குச் செல்லும் பார்வையாளர்கள் 2030ஆம் ஆண்டு முதல் புதிய அம்சங்களைக் காண நேரிடலாம்.

அதன் நிலவனப்பு உருமாற்றம் பெறுவதோடு அங்குள்ள கட்டடங்கள் பசுமையாகத் தோற்றமளிக்கும். ஒளியில் மின்னும் சித்திரங்களும் கண்ணைக் கவரும்.

ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் (RWS) நீர்முகப்பு புதுப்பொலிவு பெறும்போது அவை சாத்தியமாகும். புதிதாக 88 மீட்டர் உயரத்தில் மலைப்பாதை அந்தப் புதுப்பொலிவின் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்கும்.

$6.8 பில்லியன் மதிப்பீட்டில் ‘ஜென்டிங் சிங்கப்பூர்’ நிறுவனம் அந்தப் பொலிவூட்டும் பணிகளை மேற்கொள்ளும்.

புதிய நீர்முகப்பு வாழ்க்கைபாணி வளாகத்திற்கான நிலம் திருத்தும் பணி வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்றது.

புதிதாக இரண்டு நவீன ஹோட்டல்கள் அங்கு எழுப்பப்படும். அவற்றில் 700 அறைகள் அமைக்கப்படும். ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் ஏற்கெனவே உள்ள ஆறு ஆடம்பர ஹோட்டல்களுடன் இவையும் கூடுதலாக இடம்பெறுகின்றன.

தற்போதைய அதன் நிலப்பகுதி, புதிய மேம்பாட்டுப் பணிகள் மூலம் ஏறக்குறைய 50 விழுக்காடு விரிவடையும்.

தரைப்பகுதியில் 164,000 சதுர மீட்டருக்கும் அதிகமான இடவசதி அதற்குக் கிடைக்கும் என்று ஜென்டிங் சிங்கப்பூர் நிறுவனம் தெரிவித்தது.

பொழுதுபோக்கு விளையாட்டுகள் இல்லாத முதல் விரிவாக்கப் பணிகள் 2022 இரண்டாம் காலாண்டில் தொடங்கின.

வரும் மாதங்களில் ஹாரி பாட்டர், விஷன் ஆஃப் மேஜிக் போன்ற கண்கவர் அம்சங்களைத் திறக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

2025 முதலாம் காலாண்டில் யுனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூரில் ‘மினியன் லேண்ட்’ என்னும் அம்சம் அறிமுகம் காணும்.

அதே காலாண்டில் சிங்கப்பூர் ஓஷனேரியம் எனப்படும் கடல்மீன்கள் காட்சிப்பகுதி திறக்கப்படும். தற்போதைய சீ அக்குவேரியம் எனப்படும் மீன்வளக் காட்சியகத்தைக் காட்டிலும் அது மூன்று மடங்கு பெரிதாக இருக்கும். ஆழ்கடல் கண்காட்சி அதனுள் இருக்கும். ஆராய்ச்சி மற்றும் கற்றல் மையம் ஒன்றும் அதனுடன் இணைக்கப்படும்.

நிலம் திருத்தும் நிகழ்வில் பங்கேற்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் பேசினார். வேகமடையும் உலகப் போட்டிகளைத் தாக்குப்பிடித்து நீடிக்கும் வகையில் ஒருங்கிணைந்த உல்லாசத்தலங்கள் தொடர்ந்து புத்தாக்கம் மிக்கவையாக விளங்கி வருகிறது என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

கவர்ந்திழுக்கும் விரிவான ஹோட்டல் முகப்புகள், உணவு, பானம், மைஸ் (Mice) எனப்படும் ஒன்றுகூடல், ஊக்குவிப்பு, மாநாடு மற்றும் கண்காட்சி ஆகியவற்றுடன் பொழுதுபோக்குத் திட்டங்களும் அவ்வாறு விளங்கி வருவதாக அவர் கூறினார்.

கூட்டரங்கு மாநாடு மற்றும் பொழுதுபோக்கிற்கு உலகின் சிறந்த தளம் என்னும் சிங்கப்பூரின் நற்பெயருக்கு இதுபோன்ற அம்சங்கள் வலுசேர்ப்பதாகவும் திரு டான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்