நமது தெம்பனிஸ் நடுவம்: மோசடியில் ஈடுபட்டதாக மக்கள் கழக ஊழியர்கள் இருவர்மீது குற்றச்சாட்டு

நமது தெம்பனிஸ் நடுவம்: மோசடியில் ஈடுபட்டதாக மக்கள் கழக ஊழியர்கள் இருவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
fce8369e-68ff-4400-ad88-ece1b1f3a69d
நமது தெம்பனிஸ் நடுவத்தின் மேம்பாட்டுத் திட்டத்துக்கான அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தின் கணக்காய்வின்போது மோசடிச் சம்பவங்கள் நடந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘அவர் தெம்பனிஸ் ஹப்’ பின் மேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஜனவரி 31ஆம் தேதி நான்கு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர்களில் இருவர் மக்கள் கழகத்தின் ஊழியர்கள்.

வின்சண்ட் சாங் யூ டெக், 63, மக்கள் கழகத்தின் வசதி நிர்வாகப் பிரிவின் துணை இயக்குநராக இருந்தார். லீ கியான் வீ, 51, மக்கள் கழகத்தில் குத்தகைகளுக்கான மூத்த வசதி மேலாளராக இருந்தார்.

அவர்கள் இன்னும் அங்குப் பணிபுரிகிறார்களா என்பதை அறிந்துகொள்ள ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், மக்கள் கழகத்தைத் தொடர்புகொண்டுள்ளது.

மூன்றாவது நபரான சீட் தோங் கொக், 67, மக்கள் கழகம் சிறு கட்டடப் பணிகளுக்காக வேலையில் அமர்த்திய குத்தகை நிறுவனத்தில் வசதி மேலாளராக இருந்தார்.

நான்காவது ஆடவர் மக்கள் கழகம் அமர்த்திய குத்தகை நிறுவன மேலாளர், 42 வயது சோ சுன் காங்.

சீட் ‘கேஸ்பியன் இலெக்ட்ரிக்கல் சப் காண்டிரெக்டர்’ எனும் நிறுவனத்தின் உரிமையாளர் என்று கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்திடமிருந்து தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், நீதிமன்ற ஆவணங்களில் அந்த நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

பொய் ஆவணங்களைத் தயாரித்ததாக சீட் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் அந்த குற்றங்களை 2017ஆம் ஆண்டிலும் 2019ஆம் ஆண்டிலும் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

“அவர் மற்ற நிறுவனங்களிடமிருந்து வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 18 விலைக்குறிப்பு ஆவணங்களைத் தயாரிக்க குத்தகை நிறுவனத்தின் நிர்வாக ஊழியர்களைத் தூண்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவற்றைக் கொண்டு, மக்கள் கழகத்துக்குத் தேவைப்பட்ட மூன்று விலைக்குறிப்புகளில் அந்தக் குத்தகை நிறுவனத்தின் விலைக்குறிப்பு ஆக மலிவானதாக இருப்பதைக் காட்டி மக்கள் கழகத்தை ஏமாற்ற அவர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது,” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சீட்டின் வழக்கு பிப்ரவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மற்ற மூவரின் வழக்குகள் மீண்டும் மார்ச் மாதம் 4ஆம் தேதி விசாரனைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்