இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் மதிப்பைக் குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு சிங்கப்பூர் ஆடவர்களுக்கு $2.6 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டது.
அவ்விருவரின் செயலால் கலால் வரி, பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பும் வாகனப் பதிவின்போது செலுத்த வேண்டிய கூடுதல் பதிவுக் கூட்டணத்தில் முறைகேடும் நடந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் சுங்கத்துறையும் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
லோக் செர்ன் மெங், 45, டெஸ்மண்ட் ஃபாங் பூன் வீ, 51, இருவருக்கும் முறையே 2023 மார்ச் 6ஆம் தேதியும் திங்கட்கிழமையும் தண்டனை விதிக்கப்பட்டது.
தமது நிறுவனத்தை ஃபாங் நிர்வகிக்க அனுமதித்ததன் மூலம், வரி ஏய்ப்பைத் தூண்டிய லோக்கிற்கு மார்ச்சில் $1.2 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டது. அவர் அபராதத்தைச் செலுத்தாததால், அதற்குப் பதிலாக 26 மாதச் சிறைத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.
இந்நிலையில், சுங்கத்துறைச் சட்டத்தின்கீழ் வரி ஏய்ப்பு செய்த இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஃபாங்கிற்கு $1.3 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டது. அவரும் அபராதத்தைச் செலுத்தாததால் 27 மாதச் சிறைத்தண்டனையை ஆற்ற வேண்டும்.
குற்றப்பத்திரிகையின்படி, மெட்டாலொக்ஸ் ஆட்டோஸ் நிறுவனத்தால் 2021 ஜனவரி முதல் 2022 ஜனவரி வரை இறக்குமதி செய்யப்பட்ட 142 வாகனங்களின் மதிப்பை ஃபாங் குறைத்துக் காட்டினார். இதன்மூலம் $185,477 வரி ஏய்ப்பு செய்யப்பட்டது.
ஆணையத்துடன் வாகனங்களைப் பதிவுசெய்யும்போது 139 வாகனங்களின் மதிப்பைக் குறைத்துக் காட்டிய குற்றத்திற்காக லோக், ஃபாங் இருவருக்கும் தலா ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
130 மோட்டார் வாகனங்களின் மதிப்பு தொடர்பாகத் தவறான தகவல்களை வழங்கிய இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
குறைவாகச் செலுத்தப்பட்ட கூடுதல் பதிவுக் கட்டணமான $1.3 மில்லியனுக்கும் அதிகத் தொகையை ஆணையத்திடம் செலுத்துமாறு அந்த இருவருக்கும் உத்தரவிடப்பட்டது.

