தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையில் மோசடி செய்ததாக இரு பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
அவர்களில் ஒருவரான இங் யுவென் ஃபெய், 40, ஊழியரணியின் தொழில்முறை மாற்றுத் திட்டம் தொடர்பில் 2017, 2018ஆம் ஆண்டுகளில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் மீது வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) எட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மலேசியரான அந்தப் பெண் நடத்திய ‘ஃபர்ஸ்ட்பேஜ் டிஜிட்டல் டிசைன்’ என்னும் நிறுவனத்தில் வேலை செய்த சிங்கப்பூரரான லியாவ் யீ லிங், 54, என்பவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சம்பளச்சீட்டை போலியாகத் தயாரிக்க இங்கிற்கு உதவி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவை.
தகுதி உள்ள முதலாளிகள் தங்களது ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க ஊழியரணியின் தொழில்முறை மாற்றுத் திட்ட உதவித்தொகை வழங்கியது. ஊழியர்களின் மாதாந்தர சம்பளத்தின் அடிப்படையில் சம்பள உதவியையும் அத்திட்டம் வழங்கியது.
அந்தப் பலன்களை அனுபவிக்கும் ஆசையில், சிங்கப்பூர் நிரந்தரவாசியான இங் தமது நிறுவனத்தின் ஐந்து ஊழியர்களை அந்தத் திட்டத்திற்குப் பதிவு செய்ததாக காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
அவர்களில் இருவர் அந்த நிறுவனத்தில் வேலை செய்யவில்லை. இதர மூன்று ஊழியர்களின் சம்பளம் உயர்த்திக் காண்பிக்கப்பட்டது. அவ்வாறு போலியாக சம்பளம் உயர்த்தப்பட்டவர்களில் லியாவும் ஒருவர் என்றது காவல்துறை.
தொடர்புடைய செய்திகள்
சம்பள உதவித்தொகையில் 65,571 வெள்ளியும் ஊழியர் பயிற்சி உதவித்தொகையில் 32,284 வெள்ளியும் மோசடி செய்யப்பட்டது பின்னர் அம்பலமானது.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அந்த இரு பெண்கள் மீதான அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணை மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

