உரிய பதிவு இன்றி அல்லது காலாவதியான அனுமதிச் சான்றிதழ்களுடன் பணியாற்றிய 20க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பல் மருத்துவர்களும் பிடிபட்டனர்.
புகார் அளிக்கப்பட்ட சம்பவங்களில் எந்த நோயாளியும் பாதிப்படையவில்லை என்று சுகாதார அமைச்சு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது. 2023க்கும் 2025க்கும் இடையே அந்த மருத்துவ நிபுணர்கள் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் மருத்துவ மன்றமும் பல் மருத்துவ மன்றமும் வழக்கமாக தவணை முறையில் நடத்தி வரும் சோதனையில் இந்த விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
தவறிழைத்த நிபுணர்கள் எல்லோருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த விவகாரங்கள் நிர்வாகம் சார்ந்தவை என்றும் வேலைத்திறன் சார்ந்தவை அல்ல என்றும் சுகாதார அமைச்சு கூறியது.
அவர்களில் சிலர், தங்களது சான்றிதழ்கள் காலாவதியான பிறகும் தொடர்ந்து தங்கள் தொழிலைச் செய்துவந்ததாக அது குறிப்பிட்டது.
எனினும், சுகாதாரச் சேவைகள், அவற்றைச் சார்ந்த விதிமுறைகள் பற்றிய சட்டத்தின்கீழ், சுகாதார அமைச்சு பிப்ரவரி 6ஆம் தேதி சான்றிதழ் பெற்றவர்களுக்கு நினைவூட்டும் நோக்கில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
சான்றிதழ்களை உறுதிசெய்யும் முறைகளை நேர்த்தியாகச் செயல்படுத்தும்படி மருந்தகங்களிடம் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.
சுகாதார நிபுணர் யாரேனும் ஒருவர் பதிவு பெற்றுள்ளாரா என்பதையும், பணிக்கான சான்றிதழ் அவருக்கு உள்ளதா என்பதையும் சரிபார்க்க விரும்பும் பொதுமக்கள் ‘ஹெல்த் புரொஃபஷனல்ஸ்’ (Health Professionals) இணையத்தளத்தை நாடலாம்.
தொடர்புடைய செய்திகள்
பதிவு செய்யப்பட்ட சுகாதார நிபுணரின் பணித்தகுதி குறித்துக் கவலைகொள்ளும் நோயாளிகள், தகுந்த விவரங்களுடன் சுகாதார அமைச்சை அணுகலாம்.

