இந்தோனீசியாவைச் சேர்ந்த இல்லப் பணிப்பெண் ஒருவர், தமது முதலாளியிடமிருந்து $42,000 மதிப்புள்ள பொருள்களையும் ரொக்கத்தையும் திருடினார்.
30 வயதான ஆல்பியா என்ற அப்பணிப்பெண், 2022 ஜனவரி மாதம் அந்த முதலாளியிடம் பணியில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் 2023 ஏப்ரலில் குறுகிய காலப் பயணமாகத் தனது சொந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் எனத் தன் முதலாளியிடம் தெரிவித்தார். அதனால், அவரும் ஆல்பியாவை இந்தோனீசியாவிற்கு அனுப்பினார்.
பாத்தாம் சென்ற ஆல்பியா அங்கிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பப்போவதில்லை என்று தன் விருப்பத்தை முதலாளியிடம் தெரிவித்தார். சந்தேகமடைந்த அந்த 61 வயது முதலாளி தன்னுடைய உடைமைகளைச் சரிபார்த்தார். அப்போது தான் பொருள்களும் ரொக்கமும் திருடு போனதை அவர் கண்டறிந்தார்.
இதுகுறித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை இந்த ஆண்டு மே 4ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் காவல்துறை கைது செய்தது.
முன்னர் சிங்கப்பூர் திரும்ப விருப்பமில்லை என்று கூறிய ஆல்பியா, மீண்டும் இங்கு வந்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
ஆல்பியா தன்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். அவருக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 20 மாத சிறைத்தண்டனை விதித்தது.
தண்டனை விதிக்கப்படுமுன் அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற இரு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

