பல்வேறு வகையான மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 17 ஆண்களையும் 3 பெண்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.
அரசாங்க அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்த மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, மின்வர்த்தக மோசடி, முதலீட்டு மோசடி, இணையக் காதல் மோசடி, பாலியல் சேவை மோசடி போன்றவை அவற்றில் அடங்கும்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 16 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள்.
ஏமாற்றியதற்கு உடந்தையாக இருந்தது, குற்றச்செயல்களின் மூலம் மற்றவரின் அனுகூலத்தைப் பெற்றது, குற்றச்செயல்களின் பலன்களைத் தக்கவைக்க மற்றவருக்கு உதவியது, கணினித் தரவுகளை அனுமதியின்றி அணுக உடந்தையாக இருந்தது, பண ஆதாயத்திற்காகப் போலி சிம் அட்டைகளைத் தெரிந்தே வழங்கியது போன்ற மோசடி நடவடிக்கைகள் தொடர்பான குற்றங்களுக்காக அவர்கள்மீது ஆகஸ்ட் 17 முதல் 21 வரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
அந்த 20 நபர்களும் தங்கள் வங்கிக் கணக்குகளை மற்றவரிடம் ஒப்படைத்தது அல்லது விற்றது, மோசடியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நிதியைப் பெறவோ பணத்தைச் சேகரிக்கவோ உதவியது போன்ற நடவடிக்கைகள் மூலம் மோசடிச் செயல்களுக்குத் துணை புரிந்ததாக நம்பப்படுகிறது.
சிலர் வங்கிகளை ஏமாற்றி புதிய கணக்குகளைத் திறந்த பிறகு, அவர்களின் இணைய வங்கி விவரங்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் ஒப்படைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஒருவர் தனது ‘சிங்பாஸ்’ விவரங்களைச் சட்டவிரோதமாக வெளிப்படுத்தி, வங்கிக் கணக்கைத் திறப்பதற்குத் தனது அடையாளத்தைக் குற்றக் கும்பல்கள் தவறாகப் பயன்படுத்த அனுமதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்றொருவர் பண வெகுமதிக்காக சிம் அட்டைகளைப் பதிவுசெய்யக் குற்றக் கும்பல்களுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.
மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. யாரேனும் அத்தகைய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கண்டறியப்பட்டால், அவர்கள் அதற்குப் பொறுப்பேற்க நேரிடும் என்பதைக் காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.


