லிட்டில் இந்தியாவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டில் தீப்பற்றியதைத் தொடர்ந்து, அக்குடியிருப்பிலுள்ள வீடுகளிலிருந்து கிட்டத்தட்ட 20 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்தது.
பஃப்ளோ ரோடு புளோக் 662ன் மூன்றாம் தளத்திலுள்ள ஒரு வீட்டில் தீப்பற்றியதாக இரவு 8 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிட்டியதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அவ்வீட்டின் வசிப்பறையிலும் சமையலறையிலும் உள்ள பொருள்கள் தீப்பற்றி எரிந்த நிலையில், இரண்டு நீர்க்குழாய்கள் மூலம் நீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இதனால் வீட்டின் மற்ற பகுதிகளில் கரி பிடித்திருந்தது.
அம்மூவறை வீட்டில் தீப்பற்றியபோது அதனுள் திரு ஆர். பன்னீர்செல்வம், 56, மட்டும் படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி கவிதாவும் மகள் சினேகாவும் கோவிலுக்குச் சென்றிருந்தனர்.
புகை நெடியாலும் வெடிப்புச் சத்தம் கேட்டும், கண்விழித்துப் பார்த்த திரு பன்னீர்செல்வம், வீட்டில் தீப்பற்றியது கண்டு திடுக்கிட்டார். அதனையடுத்து, வீட்டைவிட்டு வெளியேற முயன்றார் அவர். ஆயினும், வசிப்பறையிலும் சமையலறையிலும் தீப்பற்றி இருந்ததால், அவரால் வெளியே வர முடியவில்லை.
நல்ல வேளையாக, அவர் உறங்கிய படுக்கையறை தாழ்வாரத்தை ஒட்டி இருந்ததால், காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் உதவியால் சன்னல் வழியாக அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
அவர் உடனடியாக டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சுக்குழாயில் வீக்கம் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரவு முழுவதும் செயற்கையாக உயிர்வாயு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலை மேம்பட்டுள்ளதால் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மின்கம்பிவடங்கள் தீயில் எரிந்துபோனதால் அண்டை வீடுகளுக்கும் மின்விநியோகம் தடைபட்டது. இதனையடுத்து, நகர மன்ற மின்னியல் வல்லுநர்கள் இரவு நேரத்திலும் அங்கு பணியில் ஈடுபட்டனர். புதன்கிழமை பிற்பகலில் புதிய மின்கம்பிவடங்கள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்க்குக் குடியிருப்பாளர் குழுவும் உதவிக்கரம் நீட்டியது.
இதனிடையே, தன் மருமகள் மூலம் தகவலறிந்ததும் உடனே அங்கு விரைந்தார் திரு பன்னீர்செல்வத்தின் அண்ணன் திரு ராஜாமணி.
“தீபாவளி நேரத்தில் இவ்வாறு நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. எவருக்கும் பாதிப்பில்லை என்று தெரிந்த பின்னரே நிம்மதி அடைந்தேன்,” என்றார் அவர்.
அவ்வீட்டில் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும்வரை வீவக வழங்கும் தற்காலிக வீட்டில் திரு பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் தங்குவர்.
இச்சம்பவம் தொடர்பில் டிக்டாக் சமூக ஊடகத்தில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகிறது. அதில், அவ்வீட்டில் தீப்பற்றி எரிவதையும் அதன் ஒரு சன்னல் வழியாக கரும்புகை வெளியாவதையும் காண முடிகிறது.
இரவு 8.45 மணியளவில் அங்கு சென்று பார்த்தபோது, ஏற்கெனவே தீ அணைக்கப்பட்டுவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே மூன்று தீயணைப்பு வண்டிகள், இரண்டு அவசர மருத்துவ வாகனங்கள், ஐந்து காவல்துறை கார்கள், ஒரு குடிமைத் தற்காப்புப் படை வேன் ஆகியவை இருந்ததாக அச்செய்தி குறிப்பிட்டது.
மேலும், அக்குடியிருப்பைச் சுற்றி தடுப்பு போடப்பட்டது. அவ்விடத்திலிருந்து தள்ளி இருக்கும்படி காவல்துறை அதிகாரிகளும் தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.
தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.