2025ல் வீவக வீடுகளுக்கு 20% சொத்து வரிக் கழிவு

2025ல் வீவக வீடுகளுக்கு 20% சொத்து வரிக் கழிவு

2 mins read
5db4d05b-1b3a-4b80-a5db-c6b2f39a46d7
வீவக வீடுகளில் வசிக்கும் உரிமையாளர்கள் 20% சொத்து வரிக் கழிவு பெறுவர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிப்போர் 2025ஆம் ஆண்டில் தாங்கள் செலுத்தும் சொத்து வரியில் 20 விழுக்காடு கழிவு பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தனியார் வீடுகளில் வசிப்போர் சொத்து வரியில் 15 விழுக்காடு கழிவு பெறுவர். அதேவேளை, அவர்களுக்கு வழங்கப்படும் வரிக் கழிவு 1,000 வெள்ளிக்கு மேல் இருக்காது.

உரிமையாளர்கள் வசிக்கும் வீடுகளுக்கு இந்த சொத்து வரிக் கழிவு பொருந்தும்.

நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் வெள்ளிக்கிழமையன்று (நவமபர் 29) வெளியிட்ட கூட்டறிக்கையில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து 2025ல் உரிமையாளர்கள் வசிக்கும் அனைத்து வீவக வீடுகள், 90 விழுக்காட்டுக்கும் அதிகமான தனியார் வீடுகள் ஆகியவற்றுக்கான சொத்து வரி குறையும். இதன் மூலம் வாழ்க்கைச் செலவினம் தொடர்பிலான சவால்களை சிங்கப்பூரர்கள் சமாளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமுதாய ஆதரவுத் திட்டங்களின்கீழ் (social support schemes) கணிக்கப்படும் வீட்டின் ஆண்டு மதிப்பீட்டின் இரண்டாம் தரநிலைக்கான (second AV tier) உச்சவரம்பு 31,000 வெள்ளிக்கு உயர்த்தப்படுகிறது. தற்போது அந்த உச்சவரம்பு 21,000 வெள்ளியாக உள்ளது.

சிங்கப்பூரர்கள் தொடர்ந்து ஆதரவு பெறும் நோக்கில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி நடப்புக்கு வரும்.

வீட்டு ஆண்டு மதிப்பீட்டின் முதல் தரநிலைக்கான உச்சவரம்பில் மாற்றம் இல்லை. அது தற்போது 21,000 வெள்ளியாக இருக்கிறது.

அரசாங்கம் தொடர்ந்து சமுதாய ஆதரவுத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யும் என்று நிதி அமைச்சு குறிப்பிட்டது. அதன்படி அவற்றுக்குத் தகுதிபெறுவதற்கான நிபந்தனைகளும் பரிசீலிக்கப்படும். அதிக தேவைகள் உள்ள சிங்கப்பூரர்கள் கூடுதல் உதவி பெறுவதை உறுதிசெய்வது இதன் நோக்கம் என்று நிதி அமைச்சு சொன்னது.

குறிப்புச் சொற்கள்