ஹவ்காங்கில் தீ விபத்து; 20 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

1 mins read
332c8d8b-1e81-4f66-9beb-ae068af14323
ஹவ்காங் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை எனக் கூறப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹவ்காங் பகுதியில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அப்புளோக்கிலிருந்து 20 பேர் பாதுகாப்பு கருதி அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை ஹவ்காங் ஸ்திரீட் 51, புளோக் எண் 552ல் இருக்கும் 10வது மாடியில் நடந்த இச்சம்பவம் குறித்துத் தங்களுக்கு அன்று காலை 11.15 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இத்தீவிபத்தில் யாரும் காயமடையவில்லை என அது தெரிவித்தது.

வீட்டின் படுக்கையறையில் இருந்த பொருள்களால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்ட வீட்டைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வருவதற்குள் அந்த இடத்தைவிட்டு வெளியேறினர் என்றும் தீவிபத்து ஏற்பட்ட புளோக்கில் வசிக்கும் 20 குடியிருப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை வெளியேற்றியது என்றும் கூறப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட இடத்தைக் காவல்துறையினர் சுற்றி வளைத்திருந்தனர் எனவும் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு வெளியே இருந்த மேற்கூறையில் கரும்புகை படிந்திருந்தது எனவும் அதே சமயம் குப்பைகளும் ஆடைகளும் தரையில் சிதறிக் கிடந்தன எனவும் பிற்பகல் 12.30 மணியளவில் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ சம்பவ இடத்திற்கு வந்தபோது கண்டதாக அது தெரிவித்தது.

பிற்பகல்12.45 மணியளவில், பாதிக்கப்பட்ட புளோக்கில் வசிப்பவர்கள் 10வது மாடியில் தங்கியிருப்பவர்களைத் தவிர, அனைவரும் அவர்களது குடியிருப்புகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்