ஈசூனில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் 20 வயது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் ஆபத்தாக வாகனத்தை ஓட்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 14ஆம் தேதி ஈசூன் அவென்யூ 3, ஈசூன் சென்ட்ரல் சந்திப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து 10.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்த விபத்தில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள், இரண்டு கார்கள், ஒரு லாரி ஆகியவை சிக்கியதாக காவல்துறை தெரிவித்தது.
இருபது வயது மோட்டார்சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அவரைச் சோதனையிட்ட குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவர்கள் கூறினர். மற்றொரு மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆபத்தாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்ததாக 38 வயது ஆண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை சொன்னது.
விபத்தில் மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனையில் சேர அவர்கள் மறுத்துவிட்டனர்.
விபத்து பற்றிய பல படங்களை ஃபேஸ்புக்கில் சிலர் பதிவிட்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு படத்தில், லாரியின் பின்புறத்தில் சிவப்பு நிறக் கார் மோதியிருந்தது. காரின் முன்பக்கம் சேதமடைந்திருந்தது.

