சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு ஆணையம் இயங்கத் தொடங்கிய முதல் மாதத்திலேயே, இணையத் தீங்கு தொடர்பான சுமார் 200 புகார்களைப் பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிறாரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 29ஆம் தேதி இந்த ஆணையம் தனது சேவையைத் தொடங்கியது. இணையத்தில் பரவும் தீங்கு விளைவிக்கும் பதிவுகளைத் தடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்க ஆணையம் பாடுபட்டு வருகிறது.
‘ஷிகேர்ஸ்’ ஆதரவு நிலையத்தின் பொது வரவேற்பு தின நிகழ்ச்சியில் சட்ட அமைச்சர் எட்வின் டோங், வெள்ளிக்கிழமை (ஜூலை 24) இந்த விவரங்களை வெளியிட்டார்.
அடையாளம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் அனுமதியின்றி வெளியிடும் ‘டாக்ஸிங்’ சம்பவங்களால் சிறுவர்கள் இருவர் பாதிக்கப்பட்டனர். அவர்களின் புகைப்படங்களும் தொலைபேசி எண்களும் இணையத்தில் பகிரப்பட்டன.
பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, ஆணையம் உடனடியாகச் சமூக ஊடகத் தளத்துடன் இணைந்து அப்பதிவுகளை அகற்றியது. மேலும், குற்றமிழைத்த கணக்குகளையும் முடக்கியது.
மற்றொரு சம்பவத்தில், பெண் ஒருவரின் அந்தரங்கக் காணொளி அவரது அனுமதியின்றி ஆபாச இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆணையத்தின் சட்டப்பூர்வ உத்தரவை ஏற்று, அந்த இணையத்தளம் காணொளியை உடனடியாக நீக்கியது.
இணைய நிறுவனங்கள் தீங்கான பதிவுகளை அகற்றுவதில் முன்பு நான்கு நாள்களுக்கும் மேலாகத் தாமதம் செய்து வந்தன. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த மன உளைச்சலுக்குத் தீர்வு காணவே இந்த ஒரே இடத்தில் சேவை வழங்கும் ஆணையம் அமைக்கப்பட்டது.
முதற்கட்டமாக அந்தரங்கப் படத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், சிறுவர் பாலியல் குற்றங்கள், ‘டாக்ஸிங்’, இணையத் தொல்லை, இணையப் பின்தொடர்தல் ஆகிய ஐந்து முக்கியப் பிரச்சினைகளை ஆணையம் கையாள்கிறது.
சமூக ஊடகத் தளங்களுக்கும் குழு நிர்வாகிகளுக்கும் சட்டபூர்வ உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு உண்டு. உத்தரவுகளை நிறுவனங்கள் மதிக்கத் தவறினால், அது குற்றச் செயலாகக் கருதப்படும். 18 வயதிற்குட்பட்ட சிறாரின் சார்பாகப் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் புகார் அளிக்கலாம்.
பாதிக்கப்பட்டவர்கள் எந்த அரசாங்க அமைப்பை நாடினாலும் சரியான வழிகாட்டுதலைப் பெறும் அணுகுமுறையையும் ஆணையம் பின்பற்றுகிறது.
இணையத் தீங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச ஆலோசனைகளையும் உணர்வுபூர்வமான ஆதரவையும் வழங்க ‘ஷிகேர்ஸ்’ நிலையம் செயல்படுகிறது. ஆணையத்தின் இந்த விரைவான நடவடிக்கைகள் மன அமைதி தருவதாகக் கூறிய பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஆணையத்திற்குத் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

