சிங்கப்பூரில் குப்பைகளைச் சேகரித்து அகற்றும் சேவையை வழங்கும் மூன்று நிறுவனங்களில் ஒன்றான ‘கோரா என்வைரன்மென்ட்’, கழிவுகளிலிருந்து பயனுள்ள பொருள்களைப் பிரித்தெடுத்தல், மறுசுழற்சி ஆகியவை தொடர்பான திறன்களை மேம்படுத்துவதற்கு $200 மில்லியனை முதலீடு செய்ய உறுதிகூறியுள்ளது.
முன்னர் ‘செம்ப்கார்ப் என்வைரன்மென்ட் அண்ட் செம்ப்வேஸ்ட்’ என்று அறியப்பட்ட அந்நிறுவனம், அடுத்த ஐந்தாண்டுகளில் இவ்வாறு முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை (செப்டம்பர் 11) நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ கொக் கின், “கழிவு என்பது ஒன்றன் முடிவன்று, அது ஒரு தொடக்கம் என்று கருதுகிறோம். மீட்கப்பட வேண்டிய, மதிப்புள்ளதாக உருமாற்றப்பட வேண்டிய ஒரு வளமாக அதைக் கருதுகிறோம்,” என்று கூறினார்.
முதலீடு செய்யப்படும் தொகையை 10 முன்னோடித் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எரியூட்டப்பட்ட பொருள்களின் சாம்பலை நில மீட்பு, கான்கிரீட் தயாரிப்பு ஆகியவற்றில் உதவக்கூடிய, மணலுக்கு மாற்றான பொருளாக உருமாற்றும் திட்டமும் இவற்றுள் அடங்கும்.
தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் பொது இடங்களில் குப்பைகளை அகற்றும் திட்டத்தின்கீழ், ‘கோரா என்வைரன்மென்ட்’ தற்போது 450,000 வீடுகள், வணிக வளாகங்களிலிருந்து குப்பைகளை அகற்றும் சேவையை வழங்குகிறது.
முதலீட்டு நிதியைக் கொண்டு அக்டோபர் மாதத்தில் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கழிவுகள், மறுசுழற்சிப் பொருள்கள் தொடர்பில் நிகழ்நேரத் தகவல்களை வழங்கும் மின்னிலக்கத் தளம் தொடங்கப்படும் என்று திரு லீ தெரிவித்தார்.
‘கோரா என்வைரன்மென்ட்’ நிறுவனம் கழிவுப் பொருள்களின் உருமாற்றம் என்பதற்கும் அப்பால், குப்பைகளை நீடித்த நிலைத்தன்மை மிக்க முறையில் நிர்வகிக்கும் சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கான தீர்வுகளை வழங்குவதை இலக்காகக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
வியாழக்கிழமை நடைபெற்ற, நிறுவனத்தின் கழிவிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலையின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது, கழிவுகளை நீராவியாக மாற்றுவதில் அந்த ஆலையின் பங்களிப்பு குறித்தும் ஜூரோங் தீவில் உள்ள தொழிற்சாலைகளில் அந்த எரிசக்தி பயன்படுத்தப்படுவது குறித்தும் எடுத்துரைத்தார்.