எச்எஸ்பிசி சிங்கப்பூர் வங்கியில் 200 புதிய வேலைவாய்ப்புகள்

எச்எஸ்பிசி சிங்கப்பூர் வங்கியில் 200 புதிய வேலைவாய்ப்புகள்

2 mins read
cdae4a7d-ddd5-4b40-aff8-64ae3e0f5a19
எச்எஸ்பிசி சிங்கப்பூரின் தலைமை நிர்வாகி வோங் கீ ஜூ. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

முன்னணி நிதிச் சேவை நிறுவனமான எச்எஸ்பிசி, சிங்கப்பூரில் 200க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

அந்நிறுவனம் தனது முதலாவது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உன்னத நிலையத்தைச் சிங்கப்பூரில் 2026 பிற்பாதியில் அமைக்கவுள்ளது. இந்த மையத்திற்காக 100க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவுத் துறை நிபுணர்களை எச்எஸ்பிசி வேலைக்கு அமர்த்தவுள்ளது.

செல்வ நிர்வாகம், உலகளாவிய பணப்பரிவர்த்தனைத் தீர்வுகளுக்குத் தேவையான நவீன கருவிகளை உருவாக்குவதில் அந்த நிபுணர்கள் ஈடுபடுவர். இயற்கை மொழிச் செயலாக்கம், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு நிர்வாகம், மனிதனை மையமாகக் கொண்ட வடிவமைப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் அவர்கள் கவனம் செலுத்துவர். இங்கு உருவாக்கப்படும் கருவிகள் பின்னர் வங்கியின் உலகளாவிய அமைப்பில் பயன்படுத்தப்படும்.

அத்துடன், உயர்வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை வழங்கவும் அவர்களுடனான பிணைப்பை மேலும் பலப்படுத்தவும் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த ஈராண்டுகளில் பிரிமியர், தனிநபர் வங்கியியல் பிரிவுகளில் 100 தொடர்பு மேலாளர்களை வங்கி பணியமர்த்தவுள்ளது. ஊழியர்களின் திறன்களை உயர்த்த லண்டன் வர்த்தகப் பள்ளியுடன் இணைந்து பயிற்சிகளிலும் வங்கி தொடர்ந்து முதலீடு செய்யும்.

மேலும், புதிய தொழில்முனைவர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களை முதலீட்டாளர்களுடன் இணைத்து, அவர்களின் வணிக, தனிப்பட்ட செல்வ நிர்வாகத் தேவைகளுக்கான முழுமையான தீர்வுகளையும் எச்எஸ்பிசி வழங்கும்.

அனைத்துலக வங்கி என்ற அடிப்படையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவும் உலகளாவிய பணப்பரிவர்த்தனைகளைத் தடையின்றி வழங்கவும் நவீன தொழில்நுட்பங்களில் பெரிதும் முதலீடு செய்யப்படுவதாக எச்எஸ்பிசி சிங்கப்பூரின் தலைமை நிர்வாகி வோங் கீ ஜூ குறிப்பிட்டார்.

மின்னணுக் கட்டண முறை, புளோக்செயின் தொழில்நுட்பம், டோக்கன் வைப்புத்தொகை தொடர்பிலும் வங்கி தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. சிங்கப்பூரில் தற்போது எச்எஸ்பிசி வங்கியில் 3,600க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஒரு முன்னணிச் செல்வ நிர்வாக, வர்த்தக மற்றும் புத்தாக்க மையமாகத் திகழும் சிங்கப்பூரின் பிரகாசமான எதிர்கால ஆற்றல்மீது தங்களுக்கு இருக்கும் வலுவான நம்பிக்கையையே இந்தத் தொழில் விரிவாக்கம் வெளிப்படுத்துவதாக திரு வோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுஏஐவங்கி