சிங்கப்பூர் நீதித்துறையின் இருநூறாண்டு நிறைவு இரவு விருந்து நிகழ்வில், ‘சிங்கப்பூர் நீதித்துறை: இருநூறாண்டு வரலாறு’ எனும் சிறப்பு நினைவு மலரை அதிபர் தர்மன் சண்முகரத்னம் வியாழக்கிழமை (நவம்பர் 26) வெளியிட்டார்.
நினைவு மலரின் அணிந்துரையில், காலனித்துவ அடித்தளத்திலிருந்து சிங்கப்பூருக்கே உரிய தனித்துவமான சட்டவியலாக நமது சட்ட அமைப்பு வளர்ந்துவந்த பயணத்தை அதிபர் தர்மன் நினைவுகூர்ந்தார்.
“நீதித்துறை ஒருபோதும் கற்பதை நிறுத்தக் கூடாது; மாறிவரும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்வதையும் நிறுத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களின் நம்பிக்கைக்கு என்றும் உரியதாகத் திகழ வேண்டும்,” என்று அதிபர் வாழ்த்தினார்.
நினைவு மலர், நீதித்துறை நிறுவப்பட்ட வரலாற்றுடன், சிங்கப்பூருக்கே உரிய சட்டவியல் எவ்வாறு உருவானது, நீதி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும் சீர்திருத்தங்கள், நீதித்துறையின் வளர்ந்துவரும் பன்னாட்டுப் பங்கு ஆகியவற்றை ஆராய்கிறது. வரவிருக்கும் சவால்கள், வாய்ப்புகள் குறித்தும் சட்டத்தின் ஆட்சியையும் மக்களின் நம்பிக்கையையும் நிலைநிறுத்துவதில் நீதித்துறைக்கு உள்ள தொடர் பொறுப்புக் குறித்தும் விவரிக்கிறது. நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், “கடந்தகாலச் சாதனைகளைப் பெருமையுடன் திரும்பிப் பார்க்கும் அதே வேளையில், வருங்காலத் தலைமுறைகளுக்காக இதனைப் பாதுகாத்து வலுப்படுத்தும் புதிய நோக்கத்துடன் முன்னோக்கிச் செல்கிறோம்,” என்றார்.
மேலும், இச்சிறப்புமிக்க தருணத்தில் சட்டத்தின் ஆட்சி, நியாயமான நீதி நிர்வாகம், சேவை செய்யும் மக்கள் மீதான அர்ப்பணிப்பு ஆகிய நிலையான விழுமியங்களைக் கொண்டாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
