தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2025 பிப்ரவரி முதல் கூடுதலாக 20,000 வாகன உரிமைச் சான்றிதழ்கள்

2 mins read
542c59f2-6cc6-4ae5-b371-8c3c27847960
2024 செப்டம்பர் மாத நிலவரப்படி, சிங்கப்பூரில் 1,003,126 வாகனங்கள் உள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் 2025 பிப்ரவரி தொடங்கி அடுத்த சில ஆண்டுகளுக்கு கூடுதலாக 20,000 வரையிலான வாகன உரிமைச் சான்றிதழ்களை (COE) வழங்கவுள்ளது.

அந்தக் கூடுதல் சான்றிதழ்கள் எல்லா வாகனப் பிரிவுகளுக்கும் உரியவை என்று ஆணையம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) அறிவித்தது.

பயணமுறை படிப்படியாக மாற்றம் கண்டு வருவதால் தற்போதைய வாகன எண்ணிக்கையில் ஏறக்குறைய 2 விழுக்காடு அதிகரிப்பைச் செய்ய இயலும்.

வாகனப் பயன்பாட்டையும் போக்குவரத்து நெரிசலையும் நிர்வகிக்க இஆர்பி 2.0 (ERP 2.0) என்னும் புதிய மின்னியல் சாலைக் கட்டண முறை கைகொடுக்கும் என்றும் அது குறிப்பிட்டு உள்ளது.

கூடுதல் சான்றிதழ்கள் சேர்க்கப்படும் நடவடிக்கை வாகன உரிமைச் சான்றிதழ் விநியோகத்தை ஊக்குவிக்கும் என்று கூறப்பட்டாலும், சான்றிதழ் கட்டணங்களில் அது எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கூடுதலாகச் சேர்க்கப்படும் சான்றிதழ்கள் ஒவ்வொரு வாகனப் பிரிவுக்கும் எந்த விகிதத்தில் பிரித்து அளிக்கப்படும் என்றும் எத்தனை ஆண்டுகளுக்கு அந்த நடவடிக்கை நீடிக்கும் என்றும் ஆணையத்திடம் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ கேட்டிருந்தது.

அக்டோபர் 23ஆம் தேதி நடத்தப்பட்ட ஆக அண்மைய ஏலத்தில் எல்லா வாகனப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் சரிந்தன.

அதேநேரம், இரு வகையான கார்களுக்குரிய சிஓஇ கட்டணங்கள் இன்னும் $100,000க்கு மேலேயே நீடிக்கின்றன.

2024 செப்டம்பர் மாத நிலவரப்படி, சிங்கப்பூரில் 1,003,126 வாகனங்கள் உள்ளன.

இஆர்பி 2.0ன் கீழ் பதிவாகும் விவரங்கள் கிடைத்த பின்னர், அதற்கேற்ற வகையில் கூடுதல் சான்றிதழ்களைச் சேர்ப்பது பற்றி பரிசீலிக்க இருப்பதாக ஆணையம் தெரிவித்து உள்ளது.

தூர அடிப்படையிலான கட்டண விதிப்பு முறையை அறிமுகம் செய்வதும் பரிசீலனையில் உள்ள ஒரு தெரிவு.

தேவைப்பட்டால், போக்குவரத்து நிலவரத்தின் அடிப்படையில் மின்னியல் சாலைக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படும் என்றது ஆணையம்.

2025 பிப்ரவரியில் தொடங்கும் கூடுதல் சான்றிதழ்கள் சேர்ப்பு என்பது, 1997ஆம் ஆண்டுக்கும் 2003ஆம் ஆண்டுக்கும் இடையில் 10,500 சான்றிதழ்களை அரசாங்கம் கூடுதலாகச் சேர்த்த நடைமுறையைப் போன்றதுதான் என்று ஆணையம் விளக்கி உள்ளது.

அத்துடன், வாகன எண்ணிக்கைப் பெருக்கத்தைப் பொறுத்தும் அந்நடவடிக்கை அமையும் என்றது அது.

சிங்கப்பூரின் வாகன எண்ணிக்கை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும். ஆகக் கடைசியாக, 2021ஆம் ஆண்டு மறுஆய்வு செய்யப்பட்டது.

2018ஆம் ஆண்டு முதல் வாகனங்களின் வளர்ச்சி விகிதம் பூஜ்யத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், சரக்கு வாகன விகிதம் மட்டும் ஆண்டுக்கு 0.25 விழுக்காடு என்ற அளவில் வளர்ச்சிபெற அனுமதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்