சிங்டெல் நிறுவனத்தின் புதிய காம்சென்டர் தலைமையத்தில் கூடுதலாக கிட்டத்தட்ட 20,000 சதுர மீட்டர் பரப்பரளவில் வாழ்க்கைப் பாணி, சில்லறை வணிக இடம் அமையவுள்ளது.
எக்ஸீட்டர் ரோட்டில் 2028ல் கட்டி முடிக்கப்படவுள்ள புதிய கட்டடத்தில், கூரையுடன் கூடிய திறந்தவெளி பகுதி, சிங்கப்பூர் ஆகப்பெரிய நகர்ப்புற பூங்கா, செல்லப்பிராணிக்கு உகந்த பகுதி ஆகியவை இடம்பெறும்.
$3 பில்லியன் செலவில் மறுமேம்பாடு காணும் காம்சென்டர், மொத்தம் 110,000 சதுர மீட்டருக்கும் அதிகமான தரைப் பரப்பளவுடன் கூடிய இரண்டு 20 மாடிக் கட்டடங்களையும் கொண்டிருக்கும்.
முதல் சில மாடிகள் உடற்பயிற்சி நிலையம், அரங்கம், மருத்துவ நிலையம், உணவு நிலையங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட வசதிகளுடன் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
80 விழுக்காட்டு இடம், மிக உயர்ந்த தரமான அலுவலக இடமாக இருக்கும்.
மேம்பாட்டுத் திட்டத்தின் இணை மேம்பாட்டாளரும் முதன்மைக் குத்தகையாளருமான சிங்டெல், அதில் 30 விழுக்காட்டு இடத்தை நிரப்பும். அதன் புதிய முதன்மைக் கடையும் அங்கு அமைந்திருக்கும்.
சுரங்க நடைபாதை கிளினி ரோடு, எக்ஸீட்டர் ரோடு ஆகியவற்றை டெவன்ஷைர் ரோட்டுடன் இணைக்கும்.
காம்சென்டரின் மறுமேம்பாடு, அக்கம்பக்கப் பகுதிகளுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுவதுடன் கூடுதல் வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்டெல் நிறுவனத்தின் காம்சென்டர், 1979ல் அதன் தலைமையகமாகச் செயல்படத் தொடங்கியது. அக்கட்டடத்தின் மறுமேம்பாடு 2022ல் அறிவிக்கப்பட்டது.
சிங்டெல்லும் ஆஸ்திரேலிய மேம்பாட்டு நிறுவனமான லெண்ட்லீசும் இணைந்து கட்டும் புதிய காம்சென்டர், கரிம வெளியீட்டைச் சமன்படுத்தும் சிங்கப்பூரின் முதலாவது வணிகக் கட்டடமாக இருக்கும்.
வடிவமைப்பு முதல் கட்டுமானம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.
சூரியசக்தித் தகடுகள் போன்ற பசுமைத் தொழில்நுட்பங்களிலிருந்து ஆண்டுதோறும் 1,000 மெகாவாட்-மணிநேர மறுபயனீட்டு எரிசக்தி உற்பத்தி செய்யும்.
தரைத்தளம், நான்காவது மாடியின் திறந்தவெளி, கூரைப் பகுதி ஆகிய இடங்களில் பசுமைப் பகுதிகள் இடம்பெறும்.
எரிசக்தி, நீர்ச்சேமிப்பை உறுதிசெய்ய செயற்கை நூண்ணறிவுத் தீர்வுகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த காம்சென்டர் திட்டமிட்டுள்ளது.