மியன்மாரை மார்ச் மாதத்தில் உலுக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோர்க்கு 200,000 வெள்ளி நிதி திரட்டப்பட்டுள்ளது.
நிதித்திரட்டு ஏப்ரல் 2க்கும் ஏப்ரல் 30க்கும் இடையே நடந்ததாக ரஹ்மத்தான் லில் அல்லமீன் என்ற சிங்கப்பூர் நன்கொடை அமைப்பு தெரிவித்தது. சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் கூட்டுசேர்ந்து இந்நிதித்திரட்டு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ரஹ்மத்தான் அறநிறுவனம் கூறியது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, நீர், கம்பளம் ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நிதி பயன்படுத்தப்படும்.
திரட்டப்பட்ட நிதியை ரஹ்மத்தான் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கத்திடம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒப்படைத்தது.
முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சிங்கப்பூரர்கள் ஒரு குறிக்கோளுக்காக இவ்வாறு ஒன்றிணைந்து பங்களிப்பதைக் கண்டு அகமகிழ்வதாக, உள்துறைக்கான மூத்த துணை அமைச்சராகவும் உள்ள பேராசிரியர் ஃபைஷால் தெரிவித்தார்.
“பகிரப்பட்ட பொறுப்புணர்வு, தயை, கூட்டுறவு ஆகியவற்றின் ஆற்றலுக்குச் சாட்சியாக இந்த இயக்கம் உள்ளது,” என்று அவர் கூறினார்.
பரிவுமிக்க, சுற்றியெங்கும் நோக்கும் சமூகம் என்ற நம் தேசிய மனப்பான்மையை இந்தத் திட்டத்திற்காகச் செயல்பட்ட அற அமைப்புகளின் கூட்டுறவு பிரதிபலிப்பதாக பேராசிரியர் ஃபைஷால் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மியன்மாரின் சகைங் நகரை மார்ச் 28ஆம் தேதியன்று தாக்கிய 7.7 ரிக்டர் நிலநடுக்கத்தில் 3,400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

