2015 பொதுத் தேர்தலில் ராடின் மாஸ், புக்கிட் பாத்தோக், மெக்பர்சன் ஆகிய மூன்று தனித் தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது என்பதையும் இறுதியில், ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒருவர் தமது வைப்புத்தொகையை இழக்க நேரிட்டது என்பதையும் முன்னர் பார்த்தோம்.
2020 பொதுத் தேர்தலிலும் இரு தொகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவியது. அதில் ஒன்று பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி. மற்றொன்று, பைனியர் தனித் தொகுதி. குழுத் தொகுதி ஒன்றில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது அப்போதுதான். அந்தத் தேர்தலில் வைப்புத்தொகை $13,500 என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தேர்தல் முடிவு வெளியானபோது, மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தலைமையிலான ஐவர் அடங்கிய மசெக அணி, பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியை 64.15% வாக்குகளுடன் கைப்பற்றியது. டெஸ்மண்ட் லிம் தலைமையிலான சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி 23.67% வாக்குகளைப் பெற்ற நிலையில், மூன்றாவதாகக் களமிறங்கிய மக்கள் குரல் கட்சிக்கு 12.18% வாக்குகள் கிடைத்தன. மக்கள் குரல் கட்சி அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு வேட்பாளரும் $13,500 வைப்புத்தொகையை இழக்க நேரிட்டது.
பைனியர் தனித்தொகுதியில் மசெகவின் திரு பேட்ரிக் டேக்கு எதிராக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (சிமுக) திரு லிம் செர் ஹோங்கும் சுயேச்சை வேட்பாளர் திரு சியேங் பெங் வாவும் போட்டியிட்டனர். மசெக வேட்பாளர் 61.98% வாக்குகளுடன் வெற்றிபெற, சிமுக வேட்பாளருக்கு 35.24% வாக்குகள் கிடைத்தன. சுயேச்சை வேட்பாளர் 654 வாக்குகளை மட்டுமே பெற்று தமது வைப்புத்தொகையை இழந்தார்.
ஆக, தேர்தல் களத்தில் மூவர் வெவ்வேறாகப் போட்டியிடும்போது அவர்களில் ஒருவர் வைப்புத்தொகையை இழக்கும் ஒற்றுமை நீடித்து வருகிறது.
வைப்புத் தொகையைத் திரும்பப் பெற ஒரு வேட்பாளர், தாம் போட்டியிட்ட தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 12.5% வாக்குகளைப் பெறவேண்டும்.
வைப்புத்தொகை நிர்ணயிக்கப்படும் விதம்
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன், தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி. ஒருவருக்கு ஆகக் கடைசியாக வழங்கப்பட்ட மாதாந்தர படித்தொகையே (அலவன்ஸ்) அடுத்த பொதுத் தேர்தலுக்கான வைப்புத்தொகையாக நிர்ணயிக்கப்படுகிறது. அந்தத் தொகை, அருகிலுள்ள $500க்கு சரிக்கட்டப்படும். ஏப்ரல் 15ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் உறுப்பினரின் மாதாந்தர படித்தொகை $13,750. அதில், $750 என்பது $500ஆக சரிக்கட்டப்பட்டு, $13,500 என இந்தத் தேர்தலுக்கான வைப்புத்தொகையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.