சிங்கப்பூர் விரைவுநீச்சல் சம்மேளனத்தில் (எஸ்யுஎஃப்) பயிற்றுவிப்பாளர்களாக இருந்த மூவர் மீது போலித் தகவல்களை வெளியிட்டதன் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
வெளிநாட்டு நீச்சல் போட்டி ஒன்றில் அந்தப் பயிற்றுவிப்பாளர்கள் அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக ஆறு எஸ்யுஎஃப் வீரர்கள் 2023ஆம் ஆண்டு கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுகளில் (சீ கேம்ஸ்) போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
போலி முடிவுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அந்த அறுவரும் விளையாட்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்று காவல்துறை முன்னதாக அறிக்கையில் தெரிவித்தது.
முகம்மது ஃபைஸ் சுஹைமி, 33, ஹோ ஹோ ஹுவாட், 56, இருவர் மீதும் ஏமாற்றும் நோக்குடன் மறைமுகமாகத் தவறான செயலில் ஈடுபட்டதாக வியாழக்கிழமை (மார்ச் 12) மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 35 வயது கேரி லீ குவான் ஹுவா மீது அதேபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
துடுப்பு நீச்சல் (Fin swimming) எனும் நீச்சல் போட்டியில் இவர்கள் தவறு இழைத்ததாகக் கூறப்படுகிறது. செதில் நீச்சல் என்பது, கால்களில் செயற்கை துடுப்புகளை அணிந்துகொண்டு நீரின் மேற்பரப்பில் அல்லது நீருக்குள்ளே மேற்கொள்ளப்படும் நீச்சலாகும்.

