சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மிகப்பெரிய அளவில் எண்ணெய்க் கசிவு சம்பவம் ஏற்பட்டது.
இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து அனைத்துலக எண்ணெய் மாசு இழப்பீட்டு நிதியத்திடம் 589 இழப்பீட்டுக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு $72.5 மில்லியன் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் அரசாங்கம் மட்டும் $18.4 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளது. ‘1992 நிதி’யின்கீழ் இதுவரை அதற்கு $2.8 மில்லியன் இழப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய கோரிக்கைகள் இன்னும் மதிப்பிடப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டு செப்டம்பர் 24ஆம் தேதிவரை, 589 இழப்பீட்டுக் கோரிக்கைகளில் 212 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிட்டன. அவற்றின் மொத்த மதிப்பு $31.5 மில்லியன் என்றும் இதுவரை $26.9 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துலக எண்ணெய் மாசு இழப்பீட்டு நிதியம் ‘1992 நிதி’யின்கீழ் இழப்பீட்டுத் தொகையை வழங்குகிறது.
கடந்த 2024 ஜூன் 14ஆம் தேதி நெதர்லாந்துக் கொடியுடன் கூடிய துரப்பணக் கப்பலான வோக்ஸ் மேக்சிமா கட்டுப்பாட்டை இழந்து, சிங்கப்பூரின் மரின் ஹார்பர் கப்பல்மீது மோதியது. அதன் காரணமாக, பாசிர் பாஞ்சாங் முனையத்திற்கு அருகே 400 டன் எண்ணெய் கடலில் கலந்தது.