புதிய பள்ளி ஆண்டு ஜனவரி 2 முதல் தொடங்கும்

புதிய பள்ளி ஆண்டு ஜனவரி 2 முதல் தொடங்கும்

2 mins read
6514beb5-772c-469a-9fdc-9eb40978ad56
2024ஆம் ஆண்டிற்கான பள்ளிக் காலம், விடுமுறைகள் குறித்த அறிவிப்பைக் கல்வி அமைச்சு திங்கட்கிழமை வெளியிட்டது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கல்வி அமைச்சின் பள்ளிகளில் தொடக்கநிலை 1, பாலர் வகுப்பு 1, உயர்நிலை வகுப்புகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் புதிய கல்வியாண்டை 2024ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதியன்று தொடங்குவர்.

பாலர் வகுப்பு 2, தொடக்கநிலை 2 தொடங்கி 6 வரை பயிலும் மாணவர்கள் புதிய கல்வியாண்டை 2024ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதியன்று தொடங்குவார்கள் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான பள்ளிக் காலம், விடுமுறைகள் குறித்த அறிவிப்பைக் கல்வி அமைச்சு திங்கட்கிழமை வெளியிட்டது.

கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி 2021ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.

பள்ளி முதல் நாளன்று இளம் மாணவர்கள் தங்களின் புதிய பள்ளிச் சூழலுக்குப் பழகிக்கொள்ள இந்த நடைமுறையை அமைச்சு தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

தொடக்கக் கல்லூரி, மில்லேனியா கல்விக்கழகம் ஆகியவற்றில் பயிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கும்.

தொடக்கக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் மில்லேனியா கல்விக்கழகத்தில் பயிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குமான வகுப்புகள் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கும்.

பெரும்பாலான கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள், தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி ஆண்டு இறுதி நாள் நவம்பர் 15ஆம் தேதி. சாதாரண நிலை எழுத்துத் தேர்வுகளுக்காக பயன்படுத்தப்படும் இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகளின் இறுதி நாள் அக்டோபர் 25ஆம் தேதியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொடக்கக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கும், மில்லேனியா கல்விக்கழகத்தில் முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் பள்ளி இறுதி நாள் நவம்பர் 22 என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டது.

பள்ளி விடுமுறை நாள்களில் இளையர் தினமும் (ஜூலை 1) ஆசிரியர் தினமும் (ஆகஸ்ட் 30) ​​ அடங்கும். கல்வி அமைச்சின் பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்கள் அக்டோபர் 4ஆம் தேதியன்று சிறுவர் தினத்தைக் கொண்டாடுவர்.

சீனப் புத்தாண்டின் நான்காவது நாளான பிப்ரவரி 13ஆம் தேதியும் மாணவர்களுக்கு விடுமுறை நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்