தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜாலான் காயு, பொங்கோலில் 2025 பொதுத் தேர்தலுக்குப் பின் புதிய நகர மன்றங்கள்

2 mins read
59e49293-89a5-48ed-8ca4-4d55317a2a0f
தேசிய வளர்ச்சி அமைச்சு, நகர மன்றங்கள் சட்டத்தின்கீழ் மே 30ஆம் தேதி 19 நகர மன்றங்கள் உருவாக்கப்பட்டதைக் குறிக்கும் உத்தரவை வெளியிட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இம்மாதம் 3ஆம் தேதி நடந்துமுடிந்த பொதுத் தேர்தலை அடுத்து ஜாலான் காயு, பொங்கோல் ஆகிய வட்டாரங்களில் புதிய நகர மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விண்ணப்பத்திற்கு ஏற்ப மொத்தம் 19 நகர மன்றங்கள் அமைக்கப்பட்டதற்கான உத்தரவை நகர மன்றங்கள் சட்டத்தின்கீழ் தேசிய வளர்ச்சி அமைச்சு வெளியிட்டதாக வெள்ளிக்கிழமை (மே 30) அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

இதற்குமுன் மொத்தம் 17 நகர மன்றங்கள் இருந்தன.

ஜாலான் காயு நகர மன்றத்தில் மக்கள் செயல் கட்சியின் திரு இங் சீ மெங் வெற்றிபெற்ற ஜாலான் காயு தனித்தொகுதி மட்டும் இடம்பெறும். பாட்டாளிக் கட்சியின் திரு ஆண்ட்ரே லோவை மே 3ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு இங் வென்றார்.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளரான திரு இங், ஜாலான் காயு நகர மன்றத்துக்குப் பொறுப்பு வகிப்பார்.

பொங்கோல் நகர மன்றத்தின்கீழ் மக்கள் செயல் கட்சி வென்ற பொங்கோல் குழுத்தொகுதியைப் பராமரிக்கும் பொறுப்புகள் வரும்.

போக்குவரத்து, தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் திருவாட்டி சுன் ‌ஷுவெலிங் பொங்கோல் நகர மன்றத்துக்குத் தலைமை தாங்குவார்.

இதர பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான கல்வி மற்றும் நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புறம் ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி, திருவாட்டி இயோ வான் லிங் ஆகியோர் நகர மன்றத்தின் துணைத் தலைவர்களாகச் செயல்படுவர்.

நகர மன்றச் சட்டத்தின்கீழ், தனித்தொகுதியையோ மூன்று தொகுதிகளையோ கொண்ட நகரமாக குறிப்பிட்ட ஒரு பகுதி அறிவிக்கப்படலாம்.

இவ்வாண்டு பொதுத் தேர்தலுக்கு முன் ஜாலான் காயு தனித்தொகுதி அங் மோ கியோ குழுத்தொகுதியிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது.

அங் மோ கியோ நகர மன்றத்தின்கீழ் இதற்குமுன் இயோ சூ காங், கெபுன் பாரு ஆகிய தனித்தொகுதிகள் வந்தன.

அண்மைய உத்தரவுப்படி, கெபுன் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்றி குவெக் அங் மோ கியோ நகர மன்றத்தை வழிநடத்துவார். கல்வி மற்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணையமைச்சர் ஜெஸ்மின் லாவ், திரு டேரில் டேவிட் ஆகியோர் துணைத் தலைவர்களாகப் பொறுப்பு வகிப்பர்.

ஜாலான் காயு நகர மன்றம் எங்கு அமைந்திருக்கும் என்பது உறுதிசெய்யப்பட்டதும் அது அறிவிக்கப்படும்.

அதுவரை குடியிருப்பாளர்கள் தொடர்ந்து ஃபெர்ன்வேல் சாலையில் உள்ள புளோக் 410ல் உள்ள அலுவலகத்துக்குச் செல்லலாம்.

ஜூரோங் - கிளமெண்டி நகர மன்றம் இனி ஜூரோங் - கிளமெண்டி - புக்கிட் பாத்தோக் நகர மன்றம் என்று அழைக்கப்படும்.

மரின் பரேட் நகர மன்றம் மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் நகர மன்றம் என்றும் பாசிர் ரிஸ் - பொங்கோல் நகர மன்றம் இனி பாசிர் ரிஸ் - சாங்கி நகர மன்றம் என்றும் அழைக்கப்படும். வெஸ்ட் கோஸ்ட் நகர மன்றம் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் நகர மன்றம் என்று மாற்றப்படும்.

குறிப்புச் சொற்கள்